மீனவர் படுகொலை; பாஜக, திமுக அரசுகளின் கையாலாகாத்தனமே காரணம் - சீமான் கண்டனம்
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மீனவர் படுகொலை
இலங்கை கடற்படையின் ரோந்து படகு ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களின் விசைப்படகு மோதியதில் நடுக்கடலில் படகு கவிழ்ந்துள்ளது. படகில் இருந்த 4 பேரில் இரண்டு பேரை இலங்கை கடற்படை கைது செய்து அளித்துள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். மீதமுள்ள ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் உயிரிழந்துள்ள மலைச்சாமியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சீமான்
இந்த அறிக்கையில், இலங்கை கடற்படையால் மீனவர் மலைச்சாமி படுகொலை செய்யப்பட்டதற்கு பாஜக, திமுக அரசுகளின் கையாலாகாத்தனமே காரணம் என கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி படகினை தாக்கி ராமேசுவரம் மீனவர் மலைச்சாமியை நடுக்கடலில் மூழ்கடித்துப் பச்சைப் படுகொலை செய்த இலங்கை கடற்படையின் இனவெறி அட்டூழியச் செயலானது பொறுக்கவியலா கடும் ஆத்திரத்தையும், பெரும் மனவேதனையும் அளிக்கிறது. தமிழ் மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்களை தடுக்கத் தவறிய இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. படுகொலை செய்யப்பட்ட மீனவர் தம்பி மலைச்சாமியின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
தமிழர்களுக்குச் சொந்தமான கட்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்குத் தாரைவார்த்த காலம் தொட்டே, இலங்கை கடற்படையால் தமிழர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் செயல்கள் தொடங்கிவிட்டன. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் துணையுடன் இரண்டு இலட்சம் தமிழர்களைப் படுகொலை செய்து, .ஈழ விடுதலை போராட்டத்தை இலங்கை இனவெறி அரசு ஒடுக்கிய பிறகு, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.
அதிமுக காங்கிரஸ்
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்திலும், இந்திய ஒன்றியத்தில் காங்கிரசு ஆண்டபோதும் கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்களை சிங்கள இனவெறி இராணுவம் சிறைபிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது, என அரங்கேற்றிய கொடுமைகள் தற்போதைய பாஜக ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்கள் தாக்குதல்களை நிறுத்த, அணுவளவும் இந்திய ஆட்சியாளர்கள் முயற்சி செய்ததில்லை.
இலங்கை இனவாத அரசு ஈவிரக்கமற்று தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவது தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடேயாகும். தமிழர்களின் உயிர், உடைமைகளை பறிக்கும் இலங்கை அரசை கண்டிக்க மறுத்து, அவர்களுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கும் பாஜக அரசின் துரோக ஆட்சிமுறையே இத்தாக்குதல்களுக்கு முழுமுதற் காரணமாகும்.
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் மீனவர்கள் மீதான கொடுந்தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. . இந்திய அரசிற்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து இலங்கை இனவாத அரசை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் அலட்சியமும், செயல்படாத்தன்மையுமே தற்போது மீனவர் மலைச்சாமி படுகொலை செய்யப்பட முக்கியக் காரணமாகும்.
நிரந்தரத் தீர்வு
800 க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் துள்ளத்துடிக்கப் படுகொலை செய்யப்பட்டும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்தும், தமிழக மீனவர்களின் பல கோடிக்கணக்கான சொத்துகள் சூறையாடப்பட்டபோதும் நாட்டையாளும் ஆட்சியாளர்கள் அதனைத் துளியும் பொருட்படுத்துவதுமில்லை; எவ்வித எதிர்வினைகள் ஆற்றுவதுமில்லை.
இலங்கை கடற்படையால் மீனவர் மலைச்சாமி படுகொலை செய்யப்பட்டதற்கு பாஜக, திமுக அரசுகளின் கையாலாகாத்தனமே காரணம்!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) August 1, 2024
தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி படகினை தாக்கி ராமேசுவரம் மீனவர் மலைச்சாமியை நடுக்கடலில் மூழ்கடித்துப் பச்சைப் படுகொலை செய்த இலங்கை கடற்படையின் இனவெறி அட்டூழியச் செயலானது…
உலகில் எந்த ஒரு நாடும் தனது நாட்டுக் குடிகள், அந்நிய நாட்டு இராணுவத்தால் தாக்கப்படுவதை இப்படிச் சகித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிராது. இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் உலகின் நான்காவது மிகப்பெரிய இராணுவத்தை வைத்துள்ள இந்திய அரசு, இலங்கை அரசுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்காது அமைதி காப்பது சொந்த நாட்டு மீனவர்களின் உயிர்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணும் அலட்சிய மனப்பான்மையின் வெளிப்பாடாகும்.
ஆகவே, இதுபோல இனி ஒரு மீனவரின் உயிர் பறிக்கப்படாமல் தடுக்க வேண்டியது ஒன்றிய, மாநில அரசுகளின் பொறுப்பும் கடமையும் என்பதை இனியாவது உணர்ந்து இலங்கை அரசுடனான அரசியல் மற்றும் வர்த்தக உறவை உடனடியாக இந்திய அரசு துண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு நாடாளுமன்றத்தில் தனக்குள்ள எண்ணிக்கை பலத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதோடு, உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை விரைவுபடுத்திக் கட்சத்தீவை மீட்க உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த தம்பி மலைச்சாமி குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதியுதவியும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளும் அளிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.