விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் தொல்லை - கங்கனாவின் கருத்துக்கு பாஜக கண்டனம்
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கங்கனா ரணாவத்தின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
கங்கனா ரணாவத்
பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரணாவத்திற்கு சர்ச்சையில் சிக்குவது புதிது அல்ல. ஏற்கனவே விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவர் பேசிய பேச்சுக்கு சிஐஎஸ்எப் வீரர் விமான நிலையத்தில் வைத்து அவர் கன்னத்தில் அறைந்தார்.
தற்போது மீண்டும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் தொல்லைகளும், கொலைகளும் நடந்தன. மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது.
பாஜக கண்டனம்
இல்லையென்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருப்பார்கள். அது சார்ந்த திட்டங்களை அவர்கள் வைத்திருந்தனர்.விவசாயிகள் போராட்டத்தை தடுக்க தேசத்தின் தலைமை, வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள். அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகும் போராட்டங்கள் தொடர்ந்ததற்கு வெளிநாட்டு சதிகள்தான் காரணம் என கருத்து தெரிவித்திருந்தார்.
இவரின் கருத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் அவர் சார்ந்துள்ள பாஜக கட்சியிலிருந்தே கண்டனம் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கங்கனா ரனாவத்துக்கு கட்சி சார்பில் கொள்கை விஷயங்களை பேச அதிகாரம் இல்லை, அதற்கான அனுமதியும் அவருக்கு வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என கங்கனாவிற்கு அறிவுறித்தியுள்ளோம்" என கூறப்பட்டுள்ளது.