அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலுமே.. கூட்டணி ஆட்சி தான் - டிடிவி தினகரன்!
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி ஆட்சி
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாங்கள் ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கிறோம்.
2026ல் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீட்டிற்கு அனுப்ப அமமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய் தான் இருக்கும். இவை அடுத்த 6, 7 மாதங்களில் ஆட்சி மாற்றம் நடந்தபின் சரியாகிவிடும். தமிழ்நாட்டில் 2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்து, கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும்.
டிடிவி தினகரன் உறுதி
அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வென்றாலும், கூட்டணி ஆட்சியே அமைக்கப்படும். திமுகவை வீழ்த்த கூட்டணியைப் பலப்படுத்தி வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா அதைத்தான் திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். அதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி என்பது கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு பெறுவார்கள்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த போதும், கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பாஜக இடம் கொடுத்தது. அதனால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அமித்ஷா அறிவிப்பார்.
தொடர்ந்து, அன்வர் ராஜா எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்தவர். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. எனது நண்பர். அவர் திமுகவில் இணைந்தது எனக்கு வருத்தம்தான் என்று தெரிவித்துள்ளார்.