பாஜகவை கை விட்ட ராமர் - அயோத்தியில் பின்னடைவு!
ராமர் கோவில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் பாஜக பின்னடைவை சந்திப்பது தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அயோத்தி ராமர் கோவில்
பாஜக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. தற்போதைய கள நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 297 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி 229 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்ற கட்சிகள் 17 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டது பாஜகவின் மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது. ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு நாடு முழுவதிலிருந்தும் சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் என முக்கிய பிரபலங்கள் பலரும் அழைக்க பட்டிருந்தனர். திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
மேலும், ராமர் கோயிலை மையாக வைத்து உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி, தேசிய அளவிலும் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி மிகப் பெரிய பிரச்சாரத்தை முன்னெடுத்தது.
ஃபைசாபாத்
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அத்தொகுதியில் தற்போதைய நிலவரப்படி, பாஜக வேட்பாளரான லல்லு சிங்கை விட, சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைய இணையதள தகவல் படி, உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 42 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. பாஜக கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தனித்து போட்டியிடும் ஆசாத் சமாஜ் கட்சி கட்சி 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
கடந்த 2019, 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஃபைசாபாத் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக, தற்போது பாஜகவின் கனவு திட்டமான ராமர் கோவில் திறப்புக்கு பின் தன்னுடைய முக்கிய அரசியல், ஆன்மிக தளத்தில் பின்னடைவை சந்திப்பது பாஜக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.