SIR புறக்கணிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் தான் காரணம் - பாஜக பகீர்!
அரசு ஊழியர்களின் SIR புறக்கணிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் தான் காரணம் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
SIR புறக்கணிப்பு
தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ள காரணத்தால் ஊழியர்களுக்கு அதீத பணிச்சுமை ஏற்படுவதாகக் கூறி 18ம் தேதி முதல் இந்த பணியில் ஈடுபடப்போவதில்லை என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழகத்தில் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதுவரை 93 தவீதம் பேருக்கு வாக்காளர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணியை செவ்வாய் கிழமை முதல் புறக்கணிக்கப் போவதாக இந்தப் பணியில் ஈடுபடும் தமிழக அரசு ஊழியர்கள், குறிப்பாக வரவாய்த்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் மிக அற்பமாக உள்ளன.
போதுமான பயிற்சி கொடுக்கப்படவில்லை. சிறப்பு ஊதியம் அளிக்கப்படவில்லை என்றெல்லாம் கூறுகிறார்கள். தேர்தல் ஆணையம் ஒரு பணியைச் செய்யும் போது அரசு ஊழியர்களை பயன்படுத்தும். அதற்கு அவர்களுக்கு தனியாக ஊதியம் வழங்கப்படும்.
பாஜக குற்றச்சாட்டு
வாக்குச் சாவடி அலுவலர்கள் முதல்வ வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் வரை அனைவருக்கும் தனி ஊதியம் வழங்கப்படும். இந்த பணியில் ஈடுபட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போட்டி போடுவார்கள். ஆனால் இப்போது திடீரென அரசு ஊழியர்கள் இந்த புறக்கணிப்பு முடிவை அறிவித்திருப்பதற்கு காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தரும் அழுத்தமே.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி வெற்றிகரமாக நடந்துவிடுமோ என்ற அச்சம் முதல்வர் ஸ்டாலினுக்கு வந்துவிட்டது. போலியாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள், இறந்துபோன வாக்காளர்கள், தொகுதி மாறிச் சென்ற வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவருக்கு வந்துவிட்டது. பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அவர் கண்முன் வந்து செல்கின்றன.
பீகாரில் எந்த குழப்பமும் இன்றி வாக்காளர் பட்டியல் தயாரானது. வாக்குபதிவின் போது ஒரு வாக்காளர் கூட தன் பெயர் விடுபடவில்லை என போராட்டம் செய்யவில்லை. இதனால் தமிழக அரசு ஊழியர்களுக்கு மறைமுகமாக மன அழுத்தத்தைக் கொடுக்கிறார்.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டால் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அரசு ஊழியர்கள் சென்றுவிடுவார்கள் எனக் கூறி அவர்களை திசை திருப்புகிறார். இதற்காக மாநிலம் முழுவதும் திமுகவினர் மூலம் அரசு ஊழியர்களை மிரட்டுகிறார். திமுகவினரின் மிரட்டலுக்கு பயந்து அரசு ஊழியர்கள் இந்தப் பணியை செய்ய மாட்டோம் என வேறு காரணங்களைக் கூறிப் போராட்டம் அறிவிக்கின்றனர்.
தேர்தல் ஆணையம் இதனை கவனிக்க வேண்டும். தமிழகத்தில் மிகவும் அமைதியாக நடக்கும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணி தொய்வின்றி வெற்றிகரமாக நடக்க தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவினரை தொற்றிக் கொண்டுள்ள தோல்வி பயம் காரணமாக இந்தப் பணியை எப்படியாவது முடக்க வேண்டும் என முயற்சி செய்கின்றனர். உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் எடுபடவில்லை.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியும் வெற்றிகரமாக நடப்பதால் அரசு உழியர்களுக்கு மன அழுத்தத்தை கொடுத்து இந்தப் பணியை முடக்க முயற்சிக்கும் முதல்வர் ஸ்டாலினின் முயற்சியை முறியடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.