நாட்டை உலுக்கிய பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு - 11 குற்றவாளிகளும் விடுதலை!
பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கு குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.
கோத்ரா சம்பவம்
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இந்த கலவரத்தில் 700க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும் 250க்கும் மேற்பட்ட இந்துக்களும் கொல்லப்பட்டனர்.
இதில், மார்ச் 3ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்பவரையும் அவரது குடும்பத்தினரையும் ஒரு கும்பல் தாக்கியது. அப்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கொடூரமாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
பில்கிஸ் பானு
மேலும், அவர்களின் குடும்பத்தினர் 7பேரையும் அடித்தே கொன்றனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, கடந்த 2004ஆம் ஆண்டு குற்றவாளிகளைக் கைது செய்தது. வழக்கை விசாரித்த மும்பை செசன்ஸ் கோர்ட், கடந்த 2008இல் குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.
ஆயுள் தண்டனையை எதிர்த்து, குற்றவாளிகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், தண்டனை உறுதியே செய்யப்பட்டது. விசாரணைக் காலத்தையும் சேர்த்து 15 ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருந்தனர்.
ஆயுள் தண்டனை - விடுதலை
இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது தண்டனையை ரத்து செய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து இது தொடர்பாக முடிவெடுக்க பஞ்சமஹால் கலெக்டர் சுஜல் மயாத்ரா தலைமையில் குஜராத் அரசு குழு அமைத்து. இந்த குழு 11 குற்றவாளிகளையும் விடுவிக்கலாம் என்று குஜராத் அரசுக்குப் பரிந்துரை அளித்தது.
அதன்படி அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.