கழுத்தில் சிக்கிய கேபிள் வயர்!! பேருந்து அடியில் சிக்கிய பைக் - சென்னையில் அதிர்ச்சி!!
சென்னையில் இருசக்கர வாகனம் ஓட்டிய போது, கழுத்தில் கேபிள் வயர் சிக்கி வாகன ஓட்டி விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
சென்னையின் அநேக சாலைகள் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடனே காணப்படுகிறது. அதனை சரிசெய்ய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. இருப்பினும், ஜனத்தொகை அதிகரிப்பின் காரணமாக, தவிர்க்க முடியாத ஒன்றாக போக்குவரத்து நெரிசல் இருக்கின்றது.
போக்குவரத்து நெரிசல் போலவே நகரின் பல பகுதிகளும் தினமும் விபத்துகளை சந்தித்து வருகின்றது. நாள் தோறும் மக்கள் விபத்துகளை சந்தித்து எளிதில் கடந்து செல்கிறார்கள். இச்சூழலில் தான், இன்று சென்னையில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
வயர் சிக்கி
சென்னை ராயபுரம் அருகே பைக் ஓட்டி வந்தபோது நபர் ஒருவரின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கியுள்ளது. இதன் காரணமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரின் பைக் பின்னால் வந்த பேருந்தின் அடியில் சிக்கியது. நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் விபத்தில் சிக்கிய இளைஞர் உயிர் தப்பியுள்ளார்.
சாலையின் குறுக்கே மிகவும் தாழ்வாக தனியார் இணைய சேவையின் கேபிள் வயர்கள் தொங்கியதால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ராயபுரம் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். கேபிள் வயரின் தனியார் நிறுவனம் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.