தலையை பிளந்து அறுவை சிகிச்சை - நடுவில் பியானோ வாசித்து மிரள வைத்த நோயாளி!
அறுவை சிகிச்சையின் போது நோயாளி பியானோ வாசித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூளையில் கட்டி
பீகார், பக்சர் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயது இளைஞர். அவருக்கு மூளையில் கட்டி வளர்ந்ததால் அடிக்கடி வலிப்பால் அவதிப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பரிசோதித்ததில் மூளையில் உடல் இயக்கத்தை கட்டுப்படுத்தும் பகுதி அருகே கட்டி வளர்ந்திருப்பது தெரியவந்தது. இதனால் உடனே அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
அறுவை சிகிச்சையில் ஆச்சர்யம்
அதனைத் தொடர்ந்து, நோயாளியின் உடல் பாகங்களின் இயக்கத்தையும் மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும் என்பதால், தலைப்பகுதிக்கு மட்டும் மறுப்பூசி போட்டு எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
ஒரு புறம் அறுவை சிகிச்சையை தொடர, மறுபுறம் நோயாளியிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தனர். அப்போது மருத்துவர்கள் ஹனுமன் பாடல்களை பாடச் சொல்ல, அவரும் அதைப் பாடி, அவருக்கு முன்புவைக்கப்பட்ட பியானோவில் தனது கைகளை வைத்து சில பாடல்களை வாசித்தும் காட்டினார்.
மேலும் செய்தித்தாளையும் படித்துக் காட்டினார். இதற்கிடையில், மூளைக் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாக நரம்பியல் நிபுணர் சுமித்ராஜ் தெரிவித்துள்ளார்.