தேர்வில் விடைத்தாளை காட்ட மறுத்ததால் ஆத்திரம் - சக மாணவன் சுட்டுக்கொலை
10 ஆம் வகுப்பு தேர்வில் விடைத்தாளை காட்ட மறுத்ததால் ஆத்திரத்தில், மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
10ம் வகுப்பு தேர்வு
பீகார் மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 17 ஆம் தொடங்கி பிப்ரவரி 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாரம் அருகே மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் பொதுத்தேர்வு நடைபெற்றுள்ளது.
இந்த பள்ளியில் வியாழக்கிழமை(20.02.2025) அன்று நடந்த தேர்வின் போது மாணவர் ஒருவர், சக மாணவரிடம் விடைத்தாளை காட்டுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவர் காட்ட மறுத்துள்ளார். இதில் மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சுட்டுக்கொலை
இந்நிலையில் அன்று மாலை தேர்வு முடிந்த பின்னர் மாணவர்கள் வழக்கம் போல் ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது சக மாணவர் ஆட்டோவை மறித்து அதில் இருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் அமீத் குமார் மற்றும் சஞ்சீத் குமார் படுகாயமடைந்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் அமீத் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
சாலை மறியல்
அமீத் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ரோஹ்தாஸ் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு வந்த காவல்துறை உயரதிகாரிகள் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
துப்பாக்கியால் சுட்ட மாணவனை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றி, துப்பாக்கி எப்படி கிடைத்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.