இனி 10, 12 ஆம் வகுப்பிற்கு ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு - மத்திய அரசின் முக்கிய முடிவு
CBSE பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உலகளாவிய பாடத்திட்டம்
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், சி.பி.எஸ்.இ, என்.சி.இ.ஆர்.டி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 2026-27 கல்வியாண்டில் CBSE உடன் இணைக்கப்பட்ட 260 வெளிநாட்டுப் பள்ளிகளுக்கு உலகளாவிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
அதே போல் CBSE பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பழைய முறைப்படி வினாத்தாள் மதிப்பீடு இருக்காமல் திறனை சார்ந்த மதிப்பீடு முறை ஏற்படுத்தப்படுகிறது.
இரண்டு தேர்வில் எந்த தேர்வில் சிறந்த மதிப்பெண் உள்ளதோ அது மட்டுமே பொதுத்தேர்வு மதிப்பெண்களாக எடுத்துகொள்ளப்படும். இதன் மூலம் மாணவர்களின் மன அழுத்தம் குறைவதோடு, மனப்பாடம் செய்து தேர்வெழுதாமல் புரிந்துகொண்டு படிக்கவழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு கல்லூரி படிப்பில் சேர்வதற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் திட்டமிடப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்து கல்வியாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் கருத்துகள் பெறவும் திட்டமிடப்பட்டு உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். 2026-27 கல்வியாண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.