மனைவியை கொன்றதாக சிறையில் இருந்த கணவர் - 4 ஆண்டுக்கு பின் உயிரோடு வந்த மனைவி
கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட பெண் 4 ஆண்டுகள் கழித்து உயிரோடு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவருடன் கருத்து வேறுபாடு
பீகார் மாநிலம் ஆராவில் வசிக்கும் தரம்ஷீலா தேவி என்ற பெண்ணுக்கு தீபக் என்பவருடன் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதன் பின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தரம்ஷீலா தேவி தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். சில நாட்களில் தரம்ஷீலா தேவியின் தாய் இறந்துள்ளார்.
சிறையில் கணவர் குடும்பம்
இதனையடுத்து சில நாட்களில் தரம்ஷீலா தேவி காணமல் போயுள்ளார். மகளை காணாத நிலையில் தனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி கொலை செய்து விட்டதாக தரம்ஷீலா தேவியின் தந்தை பெண்ணின் கணவரான தீபக் குடும்பத்தின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். விசாரணையில் 31.10.2024 அன்று சோன் ஆற்றங்கரையில் பெண்ணிண் சடலம் ஒன்று கிடைத்துள்ளது. இது தனது மகள்தான் என தரம்ஷீலா தேவியின் தந்தை அடையாளம் காட்டினார். இதன் பின் தீபக் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜாமீனில் வெளியே உள்ள தீபக்கின் தந்தை எதேச்சையாக தனது மருமகள் தரம்ஷீலா தேவியை நேரில் கண்டுள்ளார். அவர் உயிரோடு இருப்பதை கண்டு அதிர்ந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதன் பின் தரம்ஷீலா தேவியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.
உயிரோடு வந்த பெண்
விசாரணையில் தரம்ஷீலா தேவியின் தாய் இறந்த பின் அவரது தந்தை பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் விரக்தியில் ரயில்வே தண்டவாளத்திற்கு சென்று வாழ்க்கையை முடித்து கொள்ள முடிவெடுத்துள்ளார். அப்போது ரயில் வருவதற்குள் அங்கிருந்த வழிப்போக்கர் ஒருவர் தரம்ஷீலா தேவியை காப்பாற்றியுள்ளார்.
Meet Anaarkali of Arrah, Dharamshila Devi from Arrah, Bihar who was murdered by her Husband and In Laws in Oct 2020 for Dowry. Later Police arrested her Husband and in Laws and they were in Jail since last 4 years.
— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) October 21, 2024
Recently when her Husband Deepak came out of Jail on bail he… pic.twitter.com/mVpsLuJ4i5
அவரிடம் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்த தரம்ஷீலா தேவி, அவரை திருமணம் செய்து ஒரு மகள் ஒரு மகன் என இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகியுள்ளார். வேறொரு பெண்ணின் சடலத்தை தனது மகள் என பொய்யாக அடையாளம் காட்டியுள்ளார் தரம்ஷீலா தேவியின் தந்தை.
தரம்ஷீலா தேவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தரம்ஷீலா தேவி என அடையாளம் காணப்பட்ட சடலம் யார் என கேள்வி எழுந்துள்ளது.