உணவில்லாமல் காசா மக்கள் அவதி - விமானம் மூலம் நிவாரணம் வழங்க அமெரிக்கா திட்டம்!
காசா மக்களுக்கு விமானம் மூலமாக நிவாரண பொருட்களை அளிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
போர் தீவிரம்
மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதில் இதுவரை சுமார் 30,000 பாலஸ்தீனர்கள் உயிரிழந்து உள்ளனர்.
இதற்கிடையில், ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலை சேர்ந்த 253 பேரை காசாமுனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். மேலும்,100க்கும் மேற்பட்ட பணய கைதிகளை ஒப்பந்தம் அடிப்படையில் ஹமாஸ் விடுவித்தது.
இன்னும் 134 கைதிகள் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்ததை அடுத்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது.
அமெரிக்கா திட்டம்
வடக்கு காசாவில் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தால் மட்டுமே உதவி பொருள்கள் மக்களுக்கு சென்றடையும் நிலையுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நிவாரண பொருட்கள் கொண்ட லாரியை நோக்கி வந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து காசா மக்களுக்கு அமெரிக்க ராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை வழங்க போவதாகவும், மேலும் என்னென்ன வழிகள் இருக்கிறது என்று ஆராயப்படும் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.