நள்ளிரவில் கதவை உடைத்து பாரத மாதா சிலையை அகற்றிய வருவாய் துறை - பரபரப்பு!
இரவில் வருவாய் துறையினர் பாஜக அலுவலக கதவை உடைத்து பாரத மாதா சிலையை அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக அலுவலகம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சாலை சந்திப்பு அருகே உள்ள கிழக்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு 5 அடி உயரத்தில் பாரதமாதா சிலை வைக்கப்பட்டது. இந்த சிலையை பாஜகவினர் வைக்க யாரிடமும் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.
இதனால் போலீசார், வருவாய்த்துறையினர் பாஜக அலுவலகம் சென்று சிலையை அகற்றும்படி நிர்வாகிகளிடம் கூறினர். ஆனால் அவர்கள் சிலையை அகற்ற மறுத்தனர். அதனை பாஜக அலுவலகத்தில் தான் வைத்துள்ளோம். இதனால் அனுமதி என்பது தேவையில்லை எனக்கூறி பாரதமாதா சிலையை அகற்ற நிர்வாகிகள் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சிலை அகற்றம்
இந்நிலையில், சிலையை அகற்ற காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் முயன்றனர். இதனால் அங்கு கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, அதனால் உரிய அனுமதி பெருமான் வரை சிலையை துணியால் மூடி வைத்தனர்.
பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் போலீஸ் பாதுகாப்புடன் வந்த வருவாய் துறையினர், கதவை உடைத்து சென்று பாரத மாதா சிலையை கைப்பற்றி விருதுநகர் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், அனுமதி பெற்ற பிறகு சிலை ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.