திருவாரூர் போனால் இங்கெல்லாம் வாய்க்கு ருசியா சாப்பிடலாம் - நோட் பண்ணுங்க!
திருவாரூரில் நீங்கள் காணக்கூடியவை ஏராளம். வணிக பயணமாக இங்கு வருகிறீர்கள் என்றால், சுற்றி பார்க்க சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
அதேபோல் அதன் சுவையான உணவுகளுக்கும் பிரபலமானது. இங்குள்ள உணவகங்கள் பலவிதமான உணவுகளை வழங்குகின்றன. அசைவ உணவு பிரியர்களாக இருந்தால் கண்டிப்பாக ருசிக்க வேண்டிய உணவுகளில் ஒன்று சிக்கன் பிரியாணி. மேலும், செட்டிநாடு உணவுகள் வாயில் நீர் ஊறவைக்கும்.
அவ்வாறான சாப்பிட சிறந்த இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம் வாங்க..
பகவதி மெஸ்
இந்த உணவகம் செட்டிநாடு உணவுகளுக்கு பெயர்போனது. காந்தி சாலையில் அமைந்துள்ளது. இங்கு 3 வகையான பரோட்டாவும் செட்டிநாடு குருமாவும் ஃபேமஸ். மேலும், அசைவ உணவான அத்தனை வெரைட்டியும் கிடைக்கிறது. சவர்மா வகைகளுமே கிடைக்கும்.
மனோன்மணி மிலிட்டரி ஹோட்டல்
1955ல் தொடங்கி மூன்றாம் தலைமுறையாக நடத்தப்படும் உணவு விடுதி இது. இங்கு மணக்க மணக்க மீன் குழம்பையும், மீன் வறுவலையும் அடித்துக்கொள்ள முடியாது. கூடவே சுடுசோறுடன் ஒரு கூட்டும், ஊறுகாயும் வைப்பார்கள். சாப்பாட்டிற்கான தொகையுமே குறைவுதான். அவ்வழியாக சென்றால் இந்த இடத்தை மறந்து விடாதீர்கள்.
கனேஷ் பவன்
சுத்த சைவ உணவை சாப்பிட விரும்பினால் யோசிக்காமல் இங்கு செல்லலாம். மேல வீதியில் அமைந்துள்ளது. இங்கு விற்பனையாகும் இட்லி, சாம்பார் மற்று காஃபி பலரது ஃபேவரைட்டாக உள்ளது. மதிய வேளையில் 3க்கும் மேலான கூட்டு வகைகளுடன் நல்ல மீல் கிடைக்கிறது. சுவையிலும், தரத்திலும் சிறந்து விளங்குகிறது.
தாடிவாலா
சேந்தமங்கலத்தில் அமைந்துள்ளது. இங்கு புலாவ் சாதம் தான் ஃபேமஸே. அப்பகுதியிலேயே இங்கு மட்டும் தான் கிடைக்கிறது. அதுவும் பாய் ஸ்டைலில் பிரியாணியும் சேர்த்தே... காலை 10.30 மணிக்கே கிடைக்கும். மேலும் மாலை வேளைகளில் சைனிஸ் உணவு வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
காமராஜ் ஃபுட்ஸ், இங்கு 1972 முதல் கடலை மிட்டாய் மற்றும் 100 வகையான ஸ்னாக்ஸ் தயாரிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு சிறிய பாக்கெட் ரூ.6க்கு கிடைக்கிறது.
மன்னார் குடி, பெரியார் சிலை அருகே அமைந்துள்ள பனங்கற்கண்டு பால் கடை. ரூ.25க்கு விற்கப்படுகிறது. மேலும் பால்கோவா 20 ரூபாயில் கிடைக்கிறது. இரண்டுமே ஆர்கானிக் முறையில் செய்யப்படுகிறது.
100 வருடம் பழமையான குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை. இங்கு பலவிதமான கார வகை ஸ்னாக்ஸ் கிடைக்கிறது. மிட்டாய் வகைகளும் விற்பனையாகிறது. இங்கு பக்கோடா தான் ரொம்ப ஃபேமஸ். 100 கிராம் 24 ரூபாய்.
டெல்லி ஸ்வீட் ஸ்டால் 50 வருடமாக அங்கு அமைந்துள்ளது. இங்கு பால்கோவா வைத்து தயாராகும் சந்திரகலா ஸ்வீட் ரொம்பவே ஃபேமஸ். அந்த பக்கம் போனால் மிஸ் பண்ணிராதீங்க. 100 கிராம் 36ரூபாய்.
பத்தா பால் சர்பத் கடைனு கேட்டாலே தெரியும். 1936ல் இருந்து இயங்கி வருகிறது. அண்ணா சாலையில் அமைந்துள்ளது. 4 வகையான சர்பத் கிடைக்கிறது. குறிப்பாக பால் சர்பத் தான் இந்த கடையின் ரகசியமே.