புதுக்கோட்டையில் நாக்குக்கு ருசியா சாப்பிடணுமா? இந்த ஹோட்டல்களை மிஸ் பண்ணாதிங்க
புதுக்கோட்டை மாவட்டம்
திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்து பிரித்து 1974 ஆம் ஆண்டு புதுக்கோட்டைமாவட்டம் உருவாக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரலாற்றில் தனி இடம் உண்டு. இங்கு ஆதிகால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்தாக கூறப்படுகிறது. மேலும் இங்குள்ள பல பகுதிகளின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.
புதுக்கோட்டையில் கிடைத்த 500க்கும் மேற்பட்ட ரோமானிய தங்க மற்றும் வெள்ளி நாணயங்கள் மூலம் பண்டைய காலத்தில் முக்கிய வர்த்தக மையமாக இருந்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள பழைய துறைமுகங்கள் மூலம் பல்வேறு நாடுகளுக்கு கடல் வணிக தொடர்பு இருந்ததும் உறுதிப்படுத்தப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த இந்தியா முழுவதும் இருந்த 565 சமஸ்தானங்களில் புதுக்கோட்டை சமஸ்தானதிடமிருந்து மட்டும் வரி வசூல் செய்யப்படவில்லை. மேலும் இந்தியா 1947 ஆம் ஆண்டே சுதந்திரம் பெற்றிருந்தாலும் புதுக்கோட்டை சமஸ்தானம் 1948 ஆம் ஆண்டுதான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. புதுக்கோட்டை சென்றால் எந்த ஹோட்டலில் சாப்பிடலாம் என பார்க்கலாம்.
முட்டை மாஸ்
தற்போது தமிழ்நாடு முழுவதும் முட்டை மாஸ் கிடைத்தாலும் இதன் பூர்விகம் புதுக்கோட்டைதான். காலை டிபன் இட்லி, இடியப்பம், மதியம் பிரியாணி, இரவு புரோட்டா என மூணு வேளை உணவுக்கும் முட்டை மாஸ் செம காம்போ. புதுக்கோட்டை போனால் முட்டை மாஸ் சாப்பிட மறக்காதீங்க. இரட்டை முட்டை போட்ட 'டபுள் மாஸ்' விலை ரூ30. ஒற்றை முட்டை போட்ட 'சிங்கிள் மாஸ்'- ரூ.15 . நட்சத்திர உணவகங்களில் விலை அதிகமாக இருக்கலாம்.
பழனியப்பா மெஸ்
புதுக்கோட்டை புது பேருந்து நிலையம் அருகே உள்ளது தான் பழனியப்பா மெஸ். 50 வருடங்களுக்கு மேல இயங்கி வர்ற பழனியப்பா மெஸ்தான் முட்டை மாஸ்களுக்கு மாஸ் ஆன ஹோட்டல். மீன் வறுவல், மட்டன் சுக்கா, இறால் வறுவல் என பல வகை இருந்தாலும் கோதுமை பரோட்டா, தூள் மீன் இவர்களின் தனி அடையாளம். விலை கூட நார்மல் தான். காலை 7 மணிக்கு தொடங்கி 11 மணி வரை இயங்கும். இங்க பார்க்கிங் தான் ஒரு சிக்கல்.
காமாட்சி மெஸ்
பட்டுக்கோட்டைல அசைவத்துக்கு பெயர் பெற்ற இன்னொரு ஹோட்டல் காமாட்சி மெஸ். இறால் தொக்கு, நண்டு தொக்கு, சிக்கன் தொக்கு, கருவாடு தொக்கு என இவங்களோட மெனு லிஸ்ட்டே பெருசுதான். அதும் இறால் ஆம்லேட், கறி கோலா, மூளை பெப்பர் எல்லாம் கண்டிப்பா டேஸ்ட் பண்ண வேண்டியது.
சாப்பிட்டு வெளியே வரும் போது விருந்தோம்பலின் அடையாளமா பொறி அரிசி, கடலை மூட்டாய், வெற்றிலை பாக்கு இருக்கும். இதற்கு விலை இல்லை.
முத்துப்பிள்ளை கேன்டீன்
புதுக்கோட்டையில் 50 வருடமாக இயங்கி வருகிறது முத்துப்பிள்ளை மெஸ். முட்டை மாஸ்கக்கு பெயர் பெற்ற மற்றொரு கடை இந்த முத்துப்பிள்ளை கேன்டீன். இங்க கிடைக்குற கிரேவிக்காக எத்தனை பரோட்டா நாளும் சாப்பிடலாம். இங்க செட் தோசை, காடை சுக்கா, ஆட்டுக்கால் பாயா மிஸ் பண்ணாம சாப்பிடுங்க.
கார்த்திக் மெஸ்
புதுக்கோட்டை புது பேருந்து நிலையம் எதிரே உள்ளது கார்த்திக் மெஸ். முட்டை மாஸ்க்கு பேமஸ் ஆன ஹோட்டல்ல இதுவும் ஒன்னு. இவங்களோட கிரேவி எல்லாமே தனி சுவைல இருக்கும். இட்லி தோசைல இருந்து பரோட்டா, பிரியாணி, வஞ்சிர மீன் வரை எல்லாம் கிடைக்கும். இங்க மட்டன் ஐட்டம்ஸ் எல்லாம் ஸ்பெஷல் தான் குறிப்பாக மட்டன் ரத்த சுக்கா. விலையும் நார்மல்.
அறந்தாங்கி அசோகா மெஸ்
அறந்தாங்கியில் அமைந்துள்ளது அசோகா மெஸ். கிட்டத்தட்ட 50 வருட பாரம்பரியமான உணவகம். இங்க வீட்டு சமையல் சாப்பிடுற சுவையோட வீட்டுல சாப்பிடுற மாதிரி ஒரு விருந்தோம்பல் கிடைக்கும். சாப்பாடு ரூ.100தான். சாப்பாடுக்கு சிக்கென் மட்டன் எல்லாம் கிடைக்கும். ஆனால் மதியம் 12;30 மணி முதல் மாலை 4 மணி வரை தான் இந்த உணவகம் இயங்கும்.
ஞானகுரு சைவம்
புதுக்கோட்டை மதுரை மெயின் ரோடில் அமைந்துள்ளது ஹோட்டல் ஞானகுரு சைவம். புதுக்கோட்டையில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட ஏற்ற ஏசி உணவகம். விலை நார்மல்தான். இந்த ஹோட்டல் பரோட்டாவிற்கு பேமஸ். 3 வகையான சால்னா கிடைக்கும். இங்க வெஜ் ஆம்லெட் டேஸ்ட் பண்ண மறக்காதீங்க.
எவரெஸ்ட் உணவகம்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகம் தான் இந்த எவரெஸ்ட் உணவகம். 65 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் இந்த ஹோட்டலில் சாப்பிடும் போது வீட்டு சாப்பாடு சாப்பிட திருப்தி கிடைக்கும். இட்லி பூரி தோசை தொடங்கி சாப்பாடு, வெரைட்டி ரைஸ் எல்லாம் கிடைக்கும். ஒரு சாப்பாடு ரூ.70 தான்.