இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி - ரசிக்க மட்டுமல்ல ருசிக்கவும் நிறைய இருக்கு!
நீலகிரி மாவட்டத்தில் சிறந்த உணவுகள் கிடைக்கும் இடங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
நீலகிரி மாவட்டம்
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கின்றனர். இம்மாவட்டத்தின் பச்சை பசேலென்ற பேரழகை ரசிக்கவும், இயற்கையான காற்றை சுவாசிக்கவும்,
பனிபடர்ந்த சூழலை அனுபவிக்கவும் மக்கள் வருகை தருகின்றனர். இப்படி சுற்றுலாவை கொண்டாட வருபவர்களுக்கு சிறந்த உணவும் முக்கியம் தானே. எனவே நீலகிரி மாவட்டத்தில் எங்கு சென்றால் நீங்கள் சிறந்த உணவை சாப்பிடலாம் என்பதை பார்ப்போம்.
சாக்லேட் & டீ தூள்
பொதுவாக நீலகிரி மாவட்டம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஹோம் மேட் சாக்லேட் தான். இந்த மாவட்டத்தில் எங்கு சென்றாலும் நீங்கள் சாக்லேட்டுகளை சுவைக்கலாம். இதில் நட் ராக்ஸ், புரூட் அண்டு நட், ஒயிட் சாக்லேட்கள் மிகவும் பிரபலமானவை.
மேலும், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் வகையில் சுகர் ஃப்ரீ சாக்லேட்டுகள், எக்லெஸ் சாக்லேட்கள், ஜெயின் சாக்லேட்கள் என பல்வேறு ரகங்களிலும் விற்பனைக்கு உள்ளன. மேலும், இம்மாவட்டம் முழுவதுமாக தேயிலை தோட்டங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் செல்லும் வழியெல்லாம் டீ கடைகளும், டீ தூள்கள் விற்பனை செய்யும் கடைகளும் இருக்கும்.
Earl's Secret
ஊட்டியில் அமைந்துள்ள Earl's Secret சுற்றுலாப் பயணிகளுக்கு புதுமையான அனுபவத்தை வழங்குகிறது. இந்த உணவகத்தில் உள்ளேயும், வெளியேவும் அமர்ந்து சாப்பிடுவதற்கு வசதிகள் உள்ளன. இங்கு இத்தாலியன், சைனீஸ், இந்தியன் மற்றும் ஐரோப்பிய போன்ற சர்வதேச உணவு வகைகள் கிடைக்கின்றன.
அம்மாஸ் கிச்சன்
இது ஊட்டியில் ரோட்டரி கிளப் அருகே அமைந்துள்ளது. இந்த உணவகம் தென்னிந்திய உணவு வகைகளை வழங்குகிறது. பரோட்டா, கோபி மஞ்சூரியன் மற்றும் சைவ தாலிகள் போன்ற சுவையான உணவுகள் நியாயமான விலையில் இங்கு கிடைக்கிறது. மேலும், இந்த உணவகத்தில் கிடைக்கும் பன்னீர் தோசை பலருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது.
தலச்சேரி உணவகம்
நீங்கள் பாரம்பரிய கேரள உணவு வகைகளை ருசிக்க வேண்டும் என்றால் இங்கு செல்லலாம். இந்த உணவகம் சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக இங்கு கிடைக்கும் 'கரிமீன் பொள்ளிச்சது' என்ற வாழை இலையில் சுடப்பட்ட மீன் வெகுவாக மக்களை ஈர்க்கிறது. இந்த உணவகம் ஊட்டியில் அப்பர் பஜாரில் அமைந்துள்ளது.
STONED CREAM
இது நீலகிரி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ளது. நீங்கள் சிறந்த பீசா,பர்க்கர், சாண்ட்விச்கள் போன்றவற்றை இங்கு சாப்பிடலாம். மேலும், சுவையான ஐஸ்க்ரீம்கள் மற்றும் காபி ஆகியவற்றிற்கு நிச்சயமாக இங்கு செல்லலாம். அதேபோல், அமைதியான சூழ்நிலையுடன் குறைவான விலையில் ஒரு மாலையை கழிக்க சிறந்த இடமாக STONED CREAM உள்ளது.
ODEA RESTAURANT
இயற்கையை ரசித்துக்கொண்டு ஒரு ஏரியின் அருகிலிருந்து நீங்கள் உணவருந்த விரும்பினால் இங்கு செல்லலாம். இந்த உணவகம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள கேத்தரின் அருவிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது.
இங்கு ரொட்டி, நான், ஃபிரைட் ரைஸ், நூடுல்ஸ், பல வெரைட்டி சிக்கன், பிரியாணி ஆகியவற்றை நீங்கள் ருசிக்கலாம். ஆனால், இந்த உணவகத்தில் உங்களுக்கு மதிய உணவு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.