மயிலாடுதுறையில் எங்கு சாப்பிடலாம்னு யோசிக்கிறீங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!
மயிலாடுதுறை அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், அழகான கோவில்கள் மற்றும் அமைதியான இயற்கை அழகுக்காக அறியப்படுகிறது.
அதே சமயம் இங்கு கிடைக்கும் பாரம்பரிய உணவிற்கும் குறை இல்லை. அவ்வாறு வாய்க்கு ருசியான உணவுகள் கிடைக்கும் இடங்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
புத்தூர் ஜெயராமன்
கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள கூரைக்கடை மிகவும் பிரபலம். 50 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. சோறு, கறிக்குழம்பு, கோழிக்குழம்பு, மீன் குழம்பு, இறால் குழம்பு, ரசம், கீரை, வெங்காயப் பச்சடி பறிமாறப்படுகிறது. மேலும் வறுவல், பிரட்டல் தனியாக வாங்க வேண்டும். உணவுடன் கெட்டித் தயிரை வாரி வழங்குகிறார்கள். வெள்ளை இறால் தொக்கு முக்கிய இடத்தை பிடிக்கும். கண்டிப்பாக அங்கு சென்றால் ட்ரை பண்ணிருங்க..
மயூரா உணவகம்
மயிலாடுதுறையில் சைவ சாப்பாடு என்றால் மயூராவை கை காட்டலாம். அந்த அளவிற்கு சுவையான, தரமான சைவ உணவுகள் இங்கு கிடைக்கும். காலை டிஃபனான இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி மற்றும் பொங்கள் கிடைக்கிறது. மதிய வேளையில் வெஜ் சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் மற்றும் தக்காளி சாதம் கிடைக்கிறது. மேலும், காய்கறி கூட்டு பொரியலுடன் அருமையான மீல்ஸ் கிடைக்கிறது. இதுதவிர பரோட்டாவும் விற்பனையாகிறது.
நவாப்
மொரட்டு சிங்கிள் ரெஸ்டாரண்ட் என அழைக்கப்படுகிறது. பிரியாணிக்கென்ற பிரத்யேக உணவகம். ரோஸ்ட் சிக்கன் இங்கு ஃபேமஸ். சிக்கன், மட்டன் பிரியாணி கிடைக்கிறது. பல பரோட்டா வகைகள் உள்ளது. அதிலும் சிலோன் பரோட்டாவை பலர் விரும்பி சாப்பிடுகின்றனர்.
காளியாகுடி
காமராஜர் சாலையில் அமைந்துள்ளது. 95 வருடமாக செயல்பட்டு வருகிறது. சைவ உணவிற்கு பெயர்போனது. இங்கு பசும்பாலில் போடப்படும் காஃபிக்கு அவ்வளவு வாடிக்கையாளர் உள்ளனர். கூடவே, அல்வாக்கும்! அம்மாவாசை என்றால் குழம்புகளில் வெங்காயம் போடாமல் சமைக்கின்றனர். காலை நேர டிஃபன்கள், மதிய வேளை மீல்ஸ், இரவு நேர டிஃபபன்கள் சுவையாக கிடைக்கிறது. அந்த வழியாக சென்றால் அவசியம் இங்கு சாப்பிட்டு பாருங்கள்.
தட்டி மெஸ்
திருமஞ்சன வீதியில் அமைந்துள்ளது. 30 வருடங்களாக இயங்கி வருகிறது. மீன் சாப்பாட்டிற்கு பெயர்போன உணவகம். தரமான மீன் கிடைக்கவில்லையெனில் இந்த உணவகம் இயங்காதாம். பல வகையான மீன் வகைகளும், மட்டன் சாப்ஸ்-உம் கிடைக்கிறது. மீன் சாப்பாடு, வறுவல், கிரேவி, விற்பனை செய்யப்படுகிறது. மரச்செக்கு எண்ணெயில் மட்டும்தான் சமைக்கின்றனர். மீன் வரத்தை பொறுத்து சாப்பாட்டின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.