நடுராத்திரில நடந்துபோனது குத்தமா..ரூ.3000 அபராதம் போட்ட போலீஸ் - அதிர்ச்சி!

Bengaluru
By Sumathi Dec 12, 2022 07:33 AM GMT
Report

இரவில் ரோட்டில் நடந்து சென்ற தம்பதியிடம் போலீஸார் அபராதம் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து சென்ற தம்பதி

பெங்களூரைச் சேர்ந்தவர் கார்திக் பத்ரி. இவர் தனக்கு நேர்ந்த மோசமான சம்பவம் ஒன்றை ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். அதில், நானும் எனது மனைவியும் நேற்றிரவு எதிர்கொண்ட வலி மிகுந்த சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நடுராத்திரில நடந்துபோனது குத்தமா..ரூ.3000 அபராதம் போட்ட போலீஸ் - அதிர்ச்சி! | Bengaluru Couple Fined By Cops For Walking Night

எனது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று நானும் எனது மனைவியும் இரவு 12.30 மணி அளவில் வீடு திரும்பி கொண்டிருந்தோம். எங்கள் வீட்டருகே வந்தடைந்தபோது, காவல்துறை ரோந்து வாகனம் மூலம் சில காவலர்கள் அங்கு வந்தனர். எங்கள் அருகே வாகனத்தை நிறுத்தி விசாரிக்கத் தொடங்கினர்.

அத்துமீறல்

விவரத்தை கூறிய போது அதில் திருப்தி அடையாமல் எங்கள் அடையாள அட்டைகளை கேட்டனர். நாங்கள் அடையாள அட்டையை காண்பித்த போதும், அத்தோடு விடாமல் எங்கள் செல்போன்களை வாங்கி எங்கள் உறவு, வேலை உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை ஆராய்ந்து பார்த்தனர். தொடர்ந்து திடீரென சலான் புத்தகத்தை எடுத்து எங்கள் பெயர் மற்றும் ஆதார் எண்ணை எழுத ஆரம்பித்தனர்.

ஏன் சலான் தருகிறார்கள் என்று அதிர்ச்சி அடைந்து கேட்ட போது, 11 மணிக்கு மேல் சாலையில் நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறினர். படித்தவர்களான உங்களுக்கு இந்த விதிகள் எல்லாம் தெரியாத என்றும் வேறு கேட்டனர். விதிகள் தெரியவில்லை மன்னித்துவிடுங்கள் என்று கூறிய போதும் அத்தோடு விடாமல் ரூ.3,000 அபராதம் கட்ட வேண்டும் என்றனர்.

அபராதம் 

இந்த முறை விட்டுவிடுங்கள் என்று அவர்களிடம் கெஞ்சி பார்த்தபோது கோபத்துடன் மிரட்டத்தொடங்கினர்.ஒரு கட்டத்தில் எனது மனைவிக்கு அழுகையே வந்துவிட்டது. கடைசியில், ஒருவழியாக பேடிஎம் ஸ்கேனர் மூலம் ரூ.1,000 அபராதம் செலுத்திவிட்டு வந்தோம் என தெரிவித்து காவல்துறையை டேக் செய்துள்ளார்.

இந்த பதிவுக்கு பதிலளித்த பெங்களூரு டிசிபி அனுப் ஷெட்டி, இதை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. சம்பந்தபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.