75 வயது மூதாட்டியை வன்கொடுமை செய்த இளைஞர் - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்
மதுரையில் 75 வயது மூதாட்டியை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் மாணிக்கம் பிள்ளை பேட்டையைச் சேர்ந்த திருமலை என்ற 75 வயது மூதாட்டி திருமணம் ஆகாமல் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வந்தார்.
இவருடைய சகோதரி மகன் பாண்டி என்பவர் மாதம் ஒருமுறை வந்து பார்த்துவிட்டு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு செல்வார் என கூறப்படுகிறது.
இதனைத் தவிர மூதாட்டி திருமலை சோழவந்தானில் உள்ளகோவிலின் அன்னதானம் மற்றும் தெரிந்தவர்களிடம் யாசகம் எடுத்து வாழ்ந்து வந்தார்.
மேலும் இரவு நேரத்தில் மார்க்கெட் ரோட்டில் உள்ள ஜவுளிக்கடை வாசலில் தூங்கி காலையில் எழுந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இதேபோல் நேற்று முன்தினம் இரவு அதே ஜவுளிக்கடையில் படுத்து தூங்கி கொண்டுள்ளார். அதிகாலை 3 மணியளவில் ரோந்து பணிக்கு வந்த போலீசார் மூதாட்டி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சோழவந்தான் போலீசார் அங்கிருந்த நகைக்கடை சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது நடு இரவில் இளைஞர் ஒருவர் மூதாட்டியை தூக்கிச் செல்வது போலவும், பின்னர் போலீசார் வந்து இளைஞரை அழைத்து விசாரித்து இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்வது போலவும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த இளைஞரே மூதாட்டியை கொலை செய்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிடிபட்ட இளைஞர் ஏற்கனவே சில வழக்குகளில் குற்றவாளியாக இருந்து சிறை தண்டனை அனுபவித்து ஐந்து நாட்களுக்கு முன்பாக வெளியே வந்ததாகவும் தெரிய வந்தது.
மேலும் அந்த இளைஞர் கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.