சிக்கலில் சாம்பியன்ஸ் கோப்பை - பாகிஸ்தான் நிபந்தனையை ஏற்க மறுக்கும் பிசிசிஐ
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிசிசிஐயின் முடிவு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
அரசியல் காரணங்களால், 2008 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் செல்வதை தவிர்த்து வந்த இந்திய அணி, பாகிஸ்தானுக்கு வர முடியாது என தெரிவித்துள்ளது.
இந்தியா நிராகரிப்பு
மேலும், இந்தியா பங்கேற்கும் போட்டிகளை துபாய் அல்லது வேறு நாடுகளில் ஹைபிரிட் மாடலில் நடத்த ஐசிசியிடம் கோரிக்கை வைத்தது. ஹைபிரிட் மாடலில் நடத்த முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்த பாகிஸ்தான் பின்னர் நிபந்தனைகளுடன் ஹைபிரிட் மாடலுக்கு சம்மதம் தெரிவித்தது.
வரும் ஆண்டுகளில் இந்தியாவில் நடத்தப்படும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் பங்கேற்காது என்றும், பாகிஸ்தான் ஆடும் போட்டிகளை ஹைபிரிட் முறையில் வேறு நாடுகளில் நடத்த வேண்டும் என நிபந்தனை விதித்தது.
இந்நிலையில் இந்தியா கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என்றும், 2026 டி20 உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி இந்தியாவில்தான் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ளது போல் இந்தியாவில் பாதுகாப்பு குறைபாடு இல்லை என தெரிவித்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக நினைத்த ஐசிசிக்கு, பிசிசிஐயின் முடிவால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.