ஹைபிரிட் மாடலில் நடக்குமா சாம்பியன்ஸ் கோப்பை? 2 நிபந்தனைகளை வைத்துள்ள பாகிஸ்தான்
சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் 2 நிபந்தனைகளை விதித்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
அரசியல் பிரச்சினை காரணமாக 2008 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் செல்வதை தவிர்த்து வந்த இந்திய அணி, பாகிஸ்தானுக்கு வர முடியாது என்றும் இந்தியா பங்கேற்கும் போட்டிகளை துபாய் அல்லது வேறு நாடுகளில் நடத்தவும் ஐசிசியிடம் கோரிக்கை வைத்தது.
இந்தியா பிடிவாதம்
ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியா பாகிஸ்தானுக்கு வந்துதான் ஆக வேண்டும். ஹைபிரிட் மாடலை ஏற்க முடியாது. வராவிட்டால் தொடரிலிருந்து பாகிஸ்தான் விலகும் என எச்சரித்தது.
ஐசிசி நாடுகளில் அதிக வருமானத்தை அளிப்பது இந்திய கிரிக்கெட் வாரியம். எனவே இந்தியா தனது முடிவில் உறுதியாக இருந்த நிலையில், ஐசிசி இந்தியாவின் பக்கமே நின்றது. பாகிஸ்தான் விலகினால் தென்னாப்பிரிக்கா அல்லது வேறு நாடுகளில் நடத்த ஐசிசி திட்டமிட்டது.
பாகிஸ்தான் நிபந்தனை
இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை, ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளது. முதல் நிபந்தனையாக, இந்தியாவில் நடத்தப்படும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் பங்கேற்காது, பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை இந்தியாவை தவிர்த்து வேறு நாட்டில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
இரண்டாவது நிபந்தனையாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கான ஆண்டு வருவாய் சுழற்சியில் அதிகப்படியான தொகையை ஐசிசி ரிலீஸ் செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை, 2026 ஆம் ஆண்டு இலங்கையுடன் சேர்ந்து டி20 உலகக் கோப்பை போட்டி, 2029 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டி மற்றும் 2031ம் ஆண்டு வங்கதேசத்துடன் சேர்ந்து ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் உரிமைகளை இந்தியா பெற்றுள்ளது.