இனி கிரிக்கெட் வீரர்கள் மனைவிகளுடன் தங்க முடியாதா? - கட்டுப்பாடுகளை விதிக்கும் பிசிசிஐ
வீரர்களின் செயல்திறனை அதிகரிக்க பிசிசிஐ சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்திய அணி தோல்வி
நியூசிலாந்து அணியிடம் 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய கிரிக்கெட் அணி, சமீபத்தில் 1-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்ததோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கும் செல்லும் வாய்ப்பையும் இழந்தது.
இதன் எதிரொலியாக, அணி வீரர்களின் செயல்திறனை மேம்படுத்த, கேப்டன் ரோஹித், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தலைமை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றபிசிசிஐ மறுஆய்வுக் கூட்டத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீரர்களுக்கு கட்டுப்பாடு
இதன்படி வெளிநாட்டு தொடருக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது 45 நாள்கள் தொடர் என்றால் அதிகபட்சமாக 14 நாட்கள்தான் வீரர்களின் மனைவிகள் அவர்களுடன் தங்கியிருக்க முடியும். குறுகிய கால தொடர் என்றால் 7 நாட்கள் தங்கி கொள்ளலாம்.
ஏற்கனவே நடைமுறையில் இந்த விதிமுறையானது கொரோனா காலத்தில் நீக்கப்பட்டது. தற்போது மீண்டும் அமலுக்கு வருகிறது. முழு சுற்றுப்பயணத்தின்போதும் குடும்பத்தினர் இருப்பதால் வீரர்களின் செயல்திறன் பாதிக்கப்படுவதாக கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எந்த வீரர்களும் தனிப்பட்ட பயணம் செய்ய முடியாது. அணி வீரர்கள் செல்லும் பேருந்தில்தான் பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.