நூலிழையில் தப்பிய எடப்பாடி பழனிசாமி - பேனர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு
பிரம்மாண்ட அலங்கார வளைவு சரிந்து விபத்து ஏற்பட்டது.
சரிந்த பேனர்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்து வருகிறார்.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி, வந்தவாசி, செய்யாறு தொகுதியில் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை நடந்தது. தொடர்ந்து வேங்கிக்கால் பகுதியில் விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினருடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடும் நிகழ்வு நடந்தது.
மேலும் செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே பரப்புரையும், விவசாயிகளுடன் கலந்துரையாடலும் நடைபெற இருந்தது. இதற்காக எடப்பாடி பழனிசாமி தனது வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார். அவரை வரவேற்கும் விதமாக சாலையின் இருபுறம் பேனர்கள், கொடிகள், அலங்கார வளைவுகளை அதிமுகவினர் நிறுவியிருந்தனர்.
நூலிழையில் தப்பிய இபிஎஸ்
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை வாகனம் செங்கம் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு ஒன்று வாகனம் கடந்துசென்ற சில நொடிகளில் சரிந்து விழுந்தது.
நல்வாய்ப்பாக நூலிழையில் எடப்பாடி பழனிசாமி தப்பினார். பின்னால் வந்த காரின் மீது அலங்கார வளைவு விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருசிலருக்கு காயம் ஏற்பட்டது. இதனை அறிந்த ஈபிஎஸ் தனது வாகனத்தை உடனே நிறுத்தி
அலங்கார வளைவு விழுந்த இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.