வெடிக்கும் வன்முறை; இந்தியர்கள் வெளியே வரவேண்டாம் - தூதரகம் வேண்டுகோள்
வங்காளதேசத்தில் வன்முறை தொடர்பாக தூதரகம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
வெடிக்கும் வன்முறை
வங்காளதேசம், சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும், இதை ரத்து செய்யவேண்டும் எனவும் டாக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் 30 சதவீத இடஒதுக்கிட்டை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தூதரகம் வேண்டுகோள்
அதில், 30 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று கூறி உயர்நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். இதற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்து வருகின்றனர். மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், 'நாட்டில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, வங்காளதேசத்தில் உள்ள இந்திய சமூகத்தினர் மற்றும் மாணவர்கள் தங்கள் வளாகத்தை விட்டு வெளியே செல்வதைக் குறைக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது' எனக் குறிப்பிட்டுள்ளது.