வங்கதேசத்தில் பயங்கரம்; கொன்று பாலத்தில் தொங்க விடப்படும் உடல்கள்
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையில் அரசியல் தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
ஆட்சி கவிழ்ப்பு
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்துள்ளது. போராட்டக்காரர்கள் அவரது அதிகார பூர்வ இல்லத்தை கைப்பற்றியதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் தப்பி இந்தியா வந்துள்ளார்.
தற்போது அந்நாட்டின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. ராணுவ ஆட்சி தற்போது அமலில் உள்ள நிலையில் புதிய இடைக்கால அரசு அமைக்கும் முயற்சியில் வங்கதேச ராணுவம் இறங்கியுள்ளது. இடைக்கால அரசின் பிரதமராக நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் பதவியேற்க உள்ளார்.
படுகொலை
இந்நிலையில் நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அவாமி கட்சியின் அலுவலங்கங்கள், தலைவர்களின் வீடுகள் தாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு சொந்தமான இந்திரா காந்தி கலாசார மையமும் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது உடல் பாலத்தில் கட்டி தொங்க விடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மற்றொரு வீடியோவில் உடல் கருகிய நிலையில் முதியவர் ஒருவரின் உடல் சிற்பத்தில் கட்டி தொங்க விடப்பட்டுள்ளது.
விசாரணையில் அது பொரஹட்டி யூனியன் தலைவரும், ஜெனாய்தா சதர் அப்ஜிலா அவாமி லீக்கின் பொதுச் செயலாளருமான ஷாஹிதுல் இஸ்லாம் ஹிரோன் (75) என தெரிய வந்துள்ளது. போராட்டக்காரர்கள் அவரது வீட்டுக்கு தீ வைத்து சூறையாடி அவரையும், அவரது கார் டிரைவரையும் படுகொலை செய்தது தெரிய வந்துள்ளது.