T20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த ஷகிப் அல் ஹசன் - நாடு திரும்பினால் கைதா?
ஷகிப் அல் ஹசன் சர்வதேச T20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஷகிப் அல் ஹசன்
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது. நாளை (27.09.2024) கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஷகிப் அல் ஹசன், டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியதே எனது கடைசி சர்வதேச டி20 போட்டியாக கருதுகிறேன்.
ஓய்வு
சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி போட்டியை மிர்பூர் மைதானத்தில் விளையாட விரும்புகிறேன். அக்டோபர் மாதத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடக்கவுள்ளது. அந்த போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளேன்.
ஒருவேளை வங்கதேசம் தேர்வுக் குழு என்னை தேர்வு செய்யவில்லை என்றாலோ அல்லது பயணத்திற்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என்றாலோ, கான்பூரில் நடக்கும் இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியே என் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கொலை வழக்கு
2023 ஆம் ஆண்டு அவாமி லீக் கட்சியில் சேர்ந்த அவர், 2024 வங்கதேச பொதுத் தேர்தலில், மகுரா-1 நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அங்கு ஏற்பட்ட புரட்சியினால் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து அவர் பதவி இழந்தார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் நடைபெற்ற உள்நாட்டு போராட்டங்களில், ரபீகுல் இஸ்லாம் கொலை வழக்கில் ஷகிப் அல் ஹசன் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே நாடு திரும்பினால் அவர் கைது செய்யும் சூழல் உள்ளதால் நாடு திரும்புவது குறித்து யோசித்து வருகிறார்.
69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷகிப், 4453 ரன்களும், 242 விக்கெட்டுகளும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டின், ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி, T20 போட்டி என 3 தர போட்டிகளிலும் ஐசிசி வீரர்கள் தரவரிசையில் முதல் இடங்களைப் பெற்ற ஒரே ஆல்-ரவுண்டர் ஆவார்.