இனி ‘காலனி’ என்ற வார்த்தையே நீக்கம் - முதல்வர் ஸ்டாலின் அதிரடி
தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காலனி சொல் நீக்கம்
தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று காவல்துறை, பிற்படுத்தப்பட்டோர்,சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,
"காலனி என்ற சொல்லை நீக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வம் கோரிக்கை விடுத்து இருந்தார். ஆதிக்கம் தீண்டாமையின் அடையாளமாக இருக்கும் காலனி என்ற சொல் பொது வழக்கத்தில் இருந்து நீக்கப்படும்.
காலனி என்ற சொல் வசை சொல்லாக மாறி இருப்பதால் அரசு ஆவணங்களில் இருந்தும் அது நீக்கப்படும். ஆதிக்குடிகளை இழிவு படுத்துவது போல இந்த சொல் இருக்கிறது. அதனால் இனி அந்த வார்த்தை தமிழகத்தில் புழக்கத்தில் இருந்து தடை செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்பு
இதை வரவேற்று பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, காலனி என்ற பெயரை நீக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பிடல் காஸ்ட்ரோவின் க்யூபாவில் காலனியையும் ஊரையும் ஒன்றாக சேர்த்தார். காலனி என்ற பெயரை நீக்கிய அதே நேரத்தில் காலனி என்ற பெயருக்கு பதிலாக இலக்கியத்தில் உள்ள பெயரை வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், காலனி என்ற சொல் நீக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து கொள்கிறேன். நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
மேலும், பாமக ஜி.கே.மணி, சிபிஎம் நாகை மாலி, சிபிஐ மாரிமுத்து, மமக ஜவாஹிருல்லா, தவாக வேல்முருகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.