கனமழை எதிரொலி; சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலையில் பெய்த கன மழையின் காரணமாக ஐப்பசி மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழை
தமிழகத்தில் பருவ மழை துவங்கி கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஒரு சில மாவட்டங்களில் ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சதுரகிரி மலைப்பகுதியில் கனமழை காரணமாக கல்லணை ஆற்றுப்பாலம், லிங்கம் கோயில் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பக்தர்களுக்கு தடை
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தொடர் மலையின் காரணமாகவும் நீர் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஐப்பசி மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசைக்கு வரும் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் சதுரகிரி கோவிலின் அடிவாரப் பகுதியான தானிப்பாறைக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.