பக்ரீத் பண்டிகை - முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

Vijay M K Stalin Edappadi K. Palaniswami
By Karthikraja Jun 17, 2024 04:32 AM GMT
Report

பக்ரீத் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பக்ரீத் பண்டிகை

இன்று பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர். 

bakrid prayer

இதனையொட்டி குடியரசு தலைவர், முதல்வர்கள், மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் விலை குறைப்பு - எவ்வளவு தெரியுமா..?

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் விலை குறைப்பு - எவ்வளவு தெரியுமா..?

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

குடியரசு தலைவர் மாளிகை வௌியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பக்ரீத் திருவிழாவை கொண்டாடும் வௌிநாட்டிலுள்ள அனைத்து சக குடிமக்களுக்கும், இந்தியர்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த திருவிழா தியாகத்தின் சின்னம். இது அன்பு, சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகிய செய்திகளை நமக்கு உணர்த்துகிறது. மனித குலத்துக்கு தன்னலமற்ற சேவை செய்ய நமக்கு ஊக்கம் தருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் வளர்ச்சி, நலனுக்காக ஒன்றிணைந்து பாடுபட உறுதியேற்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து செய்து வெளியிட்டுள்ளார். இதில் “நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம் சகோதரத்துவம் அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். 

mkstalin bakrid wish

ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை 'ஈத்துவக்கும் இன்பம்' என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இசுலாமியப் பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்தப் பக்ரீத் பெருநாள்! நபிகள் நாயகத்தின் போதனைகள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறவழிக்கான அறிவுரைகளாகவே அமைந்திருக்கின்றன.

நபிகள் நாயகத்தின் அத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இசுலாமிய மக்கள் அனைவரும் இந்தப் பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி

"இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்"

பாமக நிறுவனர் ராமதாஸ்

இஸ்லாமியர்களின் தியாகத்தையும், கொடைத்தன்மையையும் போற்றும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரித் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் ஆகும்.

இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இத்திருவிழா நினைவூட்டுகிறது. தியாகத்தை போற்றுவதே இத்திருநாளின் நோக்கமாகும். பக்ரீத் திருநாள் சொல்லும் செய்தியை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளாதது தான் உலகம் முழுவதும் இன்று நிலவும் அனைத்து மோதல்களுக்கும், வீழ்ச்சிகளுக்கும் காரணமாக உள்ளது. பக்ரீத் திருநாள் சொல்லும் பாடத்தை புரிந்து கொண்டால், உலகில் எங்கும் வெறுப்பு, மோதல், வன்முறை நிலவாது.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 

TVK vijay bakrid wish

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.‌ 

அமமுக தலைவர் டிடிவி தினகரன்

"இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பு, அமைதி, சமதானம், மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம் மலரட்டும் எனக்கூறி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்."

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை

"தியாகப் பெருவாழ்வு கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகிற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்."

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

"கருணையும் ஈகையும் வலியுறுத்தும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு, தமிழ்நாடு பாஜக சார்பாக, எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தியாகத் திருநாளாம் பக்ரீத் நன்னாளில், அனைவரிடையே அமைதியும், மனித நேயமும் நிலவவும், சமத்துவமும், சகோதரத்துவமும் மலரவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்."