பெரும் சிக்கலில் தவெக கொடி..சின்னத்தை நீக்க வேண்டும் - பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை?
தவெக கொடியில் யானை சின்னத்தை நீக்க பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தவெக கொடி
மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கட்சியைத் தொடங்கிய போதிலும், 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தங்கள் இலக்கு என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் கட்சியின் கொடி, சின்னம் குறித்து தெரிவிக்காமல் இருந்த நிலையில்,
இன்று காலை அதன் அறிமுக விழா நடைபெற்றது. சென்னை பனையூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் கட்சிக்கொடி மற்றும் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் கொடியின் மையத்தில் மஞ்சளும்,மேலும் கீழும் சிவப்பு நிறத்தில் இருக்கிறது.
அத்துடன் கொடியின் மையத்தில் இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை மலரும் அமைந்து இருக்கிறது. மேலும் தமிழக வெற்றிக் கழக பாடலையும் விஜய் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகக் கொடிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
பெரும் சிக்கல்
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும், உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும், இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு வழங்கப்பட்டு,
வழக்கும் தொடுக்கப்படும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் நீல நிறத்தில் யானை சின்னம் இடம்பெற்றிருக்கும். விஜய் கட்சிக் கொடியிலும் யானை சின்னம்,
இடம் பெற்றுள்ளதால் அதனை நீக்கியாக வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.