குடிநீரில் கழிவுநீர் .. பறிபோன 3 உயிர்களுக்கு அமைச்சர் பதில் என்ன? அண்ணாமலை சரமாரி கேள்வி!
பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும்போது, அடிப்படை சோதனைகளைக் கூட மேற்கொள்ளவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
குடிநீர்
கடந்த, டிசம்பர் 5 அன்று, சென்னை பல்லாவரத்தில், குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், மூன்று பேர் பலியானதும், இருபதுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதுமான துயர சம்பவம் நடந்தது.
அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன், குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றும், பொதுமக்கள் தவறினால்தான் பாதிப்பு ஏற்பட்டது என்றும், பொதுமக்கள் மீது குற்றம் சுமத்தினார். அந்தப் பகுதியில் அன்றைய தினங்களில் வழங்கப்பட்ட குடிநீரைப் பரிசோதனைக்கு அனுப்பி, அதன் முடிவுகள் கிடைத்துள்ளன.
குடிநீரில், கோலிஃபார்ம் மற்றும் ஈ கோலி ஆகிய பாக்டீரியாக்கள் இருக்கக் கூடாது என்பது, சென்னைப் பெருநகர குடிநீர் வாரியத்தின் தரக் கட்டுப்பாடுகளில் ஒன்று. ஆனால், பல்லாவரம் பகுதியில் வழங்கப்பட்ட குடிநீரில் இந்த இரண்டு பாக்டீரியாக்களும் இருப்பது, சோதனை முடிவில் வெளிப்பட்டுள்ளது.
அண்ணாமலை
வெள்ளம் பாதித்த பகுதிகளில், பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்கும்போது, அடிப்படை சோதனைகளைக் கூட மேற்கொள்ளாமல், தங்கள் நிர்வாகத் தோல்வியை, தவறுகளை மறைத்து, அதிகாரத் திமிரின் உச்சத்தில்,
பொதுமக்களைக் குற்றவாளியாக்க முயன்ற அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன், குடிநீரில் கழிவுநீர் கலந்ததன் காரணமாகப் பறிபோன மூன்று உயிர்களுக்கு என்ன பதில் கூறுவார்?என்று பாஜக தமிழ் நாடு மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.