அரசு பள்ளியில் மாணவிக்கு 'வளைகாப்பு' நடத்திய சம்பவம் -வெளியான அதிர்ச்சி வீடியோ!
அரசுப் பள்ளியில் படித்து வரும் 12 வகுப்பு மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிக்கு வளைகாப்பு
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 12 - ம் வகுப்பு மாணவிகள் சிலர் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்று விழா நடத்தி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், மாணவிக்கு வளைகாப்பு நடத்துவதற்கான டிஜிட்டல் பத்திரிக்கை அட்டையை போனிலேயே தயார் செய்துள்ளனர் . மேலும் வளைகாப்பு நடத்தத் தேவையான பொருள்களைப் பள்ளிக்கு எடுத்து வந்துள்ளனர்.
இதனையடுத்து பள்ளியின் மேலே தளத்தில் மாணவி ஒருவரை அமர வைத்து வளைகாப்பு நடத்துவது போன்று வீடியோ எடுத்து அதனைச் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் . இந்த வீடியோ வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் மணிமொழியிடம் விசாரித்த போது இது மாணவிகள் தொடர்பான பிரச்சனை என்பதால் நிதானமாகத் தீர விசாரித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிர்ச்சி வீடியோ
தற்போதைக்கு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்து விசாரித்துள்ளதாகவும் மேலும் அந்த பள்ளியில் மட்டும் மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர்களையும் மாணவிகளோடு அமர்ந்து சாப்பிடச் சொல்லியுள்ளோம்.
ஏற்கனவே பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இனி இதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மேலும் சம்மந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரையும் அழைத்துப் பேச திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
அண்மைக்காலமாக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் இது போன்ற அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.