தாயை பிரிந்து முகாமில் தவித்த குட்டி யானை - வனத்துறை வெளியிட்ட சோக செய்தி!
தாயை பிரிந்த குட்டி யானை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய் யானை
கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் கடந்த மாதம் 30-ம் தேதி ஒரு பெண் காட்டு யானையை மயங்கிய நிலையில் வனத்துறையினர் கண்டறிந்தனர். அதனுடன் 4 மாத குட்டி யானை ஒன்றும் இருந்தது.
பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் யானைக்கு வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். அதே சமயம் தாயை எழுப்ப, குட்டி யானையும் பாசப் போராட்டம் நடத்தியது. இதனை தொடர்ந்து 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய தாய் யானை வனப்பகுதிக்குள் தானாக சென்றது.
குட்டி யானை
ஆனால், குட்டி யானை தாய் யானை ஏற்றுக்கொள்ளவில்லை. வனத்துறையினர் பலமுறை முயற்சித்தும் குட்டியை, தாயிடம் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 9-ம் தேதி நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டுக்கு குட்டி யானை கொண்டுவரப்பட்டு, யானைகள் வளர்ப்பு முகாமில் விடப்பட்டிருந்தது.
ஆனால், குட்டி யானையும் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து குட்டி யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது குட்டி யானை உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது.