முகப்பருவை அலட்சியமாக விட வேண்டாம் - தோல் புற்றுநோயாக மாறும் அபாயம்
முகப்பரு என அலட்சியமாக இருந்த பெண் பரிசோதனை செய்ததில் தோல் புற்றுநோய் என தெரிய வந்துள்ளது.
முகப்பரு
பருவ வயதில் ஆண், பெண் பேதமில்லாமல் பலருக்கும் முகப்பரு வரும். நாட்கள் செல்ல செல்ல மறைந்து விடும். சிலருக்கு முகப்பரு வந்ததற்கான அடையாளம் மட்டும் முகத்தில் இருக்கும்.
ஹார்மோன் மாற்றங்கள், சரியான தோல் பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் முகப்பரு ஏற்படுகிறது. பலரும் முகப்பருவால் அவதிப்பட்டாலும் பெரும்பாலானோர் அதை பெரிதாக பொருட்படுத்துவதில்லை.
தோல் புற்றுநோய்
இதே போல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 32 வயதான ரேச்சல் ஒலிவியா என்ற பெண்ணிற்கு தனது நெற்றியில் சிகப்பு நிறத்தில் முகப்பரு போன்று வீக்கம் ஏற்பட்டுள்ளது.
அதை சாதாரண முகப்பருவாக கருதிய அவர், அதை அழுத்தி உடைத்துள்ளார். ஆனால் அதன் வீக்கம் அதிகரித்ததோடு அது குணமடையவில்லை. இதனால் சரும பராமரிப்பு நிபுணரை அணுகியுள்ளார். அவர் அது முகப்பரு தான் என்றும்அதை அழுத்தியதால் இவ்வாறு ஆகியிருக்கும் என கூறியுள்ளார்.
மேலும், நீண்ட நாட்கள் ஆகியும் வீக்கம் குறையாத நிலையில் தோல் மருத்துவரை சந்தித்து, பயாப்ஸி செய்து பார்த்த போது அவருக்கு தோல் புற்றுநோய் உள்ளதாக அதிர்ச்சி தகவலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரச்சாரம்
இது குறித்து பேசிய ரேச்சல் ஒலிவியா, "நான் ஒருபோதும் வெயிலில் அதிகமாக இருந்ததில்லை. என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சன் ஸ்மார்ட் என்றுதான் அழைப்பார்கள். அதிர்ஸ்டவசமாக எனக்கு ஏற்பட்டது பாசல் செல் கார்சினோமா (BCC) எனப்படும் பொதுவான புற்றுநோய். இதற்காக சிகிச்சை எடுத்தால் குணப்படுத்தி விடலாம்.
இதற்காக அல்டாரா என்ற மேற்பூச்சு கீமோதெரபி கிரீம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பயணம் எளிதானது அல்ல. ஒரு குழந்தையுடன் அதைக் கவனிப்பது மிகவும் கடினம். அன்றாட செயல்பாடுகளை சவாலாக மாற்றியுள்ளது" என தெரிவித்துள்ளார்.
தற்போது தோல் புற்றுநோயின் ஆபத்துகள் மற்றும் சூரிய கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்தில் ரேச்சல் ஒலிவியா ஈடுபட்டு வருகிறார்.