காதலை ஏற்காவிட்டால் கொன்று விடுவேன்..வீடு புகுந்து கொல்ல முயற்சி - தொடர் அதிர்ச்சி
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வீட்டுக்குள் புகுந்து அவரைக் கொல்ல முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு தலை காதல்
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ரஷீத்(28) என்பவர், அந்த மாணவியை நீண்ட நாட்களாக ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார்.
அந்த மாணவியிடம் அவரது காதலைச் சொன்ன போது அவர் ஏற்க மறுத்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த மாணவியும், அவரது தாயும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது அவர்களது வீட்டிற்குள் புகுந்த ரஷீத், மாணவியிடம் தகராறு செய்துள்ளார்.
கொலை முயற்சி
தனது காதலை ஏற்குமாறு சண்டை போட்டுள்ளார். ஆனால், அவரது காதலை மாணவி ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஷீத், அந்த மாணவியைக் கடுமையாகத் தாக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதனால் தாயும், மகளும் அலறவும், அக்கம் பக்கத்தினர் வரவும் ரஷீத் தப்பி ஓடியுள்ளார். போகும் போது, என் காதலை நீ ஏற்காவிட்டால் கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்தும் சென்றுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து மாணவியன் பெற்றோர், சூளைமேடு போலீஸில் புகார் செய்தனர்.
இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரஷீத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.