காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுக்க முயன்ற இளைஞர் - போராடி மீட்ட பெற்றோர்
தெலங்கானாவில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை வீட்டுக்குள் புகுந்து கழுத்தை அறுக்க முயன்ற இளைஞரை அப்பெண்ணின் பெற்றோர் போலீசில் ஒப்படைத்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கெச்பவுலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ருக்கிசிங் என்ற இளம்பெண் நேற்றிரவு தன்னுடைய வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அவருடைய உறவினரான பிரேம் சிங் என்பவர் திடீரென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். பின் ருக்கிசிங் படுக்கை அறைக்குள் சென்று தன்னிடம் இருந்த கத்தியால் அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார்.
ருக்கிசிங் போட்ட அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவருடைய பெற்றோர் பிரேம் சிங்கை பிடிக்க முயன்றனர். ஆனால் ருக்கிசிங் கை, கால்களிலும் பிரேம்சிங் கத்தியால் வெட்டி காயப்படுத்தினார். ஒருவழியாக பிரேம்சிங்கை பிடித்த அவரது பெற்றோர் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் பிரேம் சிங்கின் காதலை ருக்கிசிங் ஏற்க மறுத்ததால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது, படுகாயமடைந்த ருக்கிசிங் அந்தப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.