எப்படி ஒரு பெண்ணை திட்டலாம்..? - நடத்துநரை சரமாரியாக தாக்கிய 5 வாலிபர்கள்!
தனியார் பேருந்து நடத்துநரை 5 வாலிபர்கள் சேர்ந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குவாதம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சூளைக்கரை நிறுத்தத்தில் இறங்க வேண்டிய பெண் பயணி ஒருவரை சற்று தள்ளி இறக்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பெண் பயணிக்கும், நடத்துநருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பேருந்து துவாக்குடி சென்று மீண்டும் சத்திரம் நோக்கி திரும்பி வந்துள்ளது.
தாக்குதல்
அப்போது சூளைக்கரை பேருந்து நிறுத்தத்திலிருந்து ஏறிய 5 வாலிபர்கள், எப்படி ஒரு பெண்ணை திட்டலாம்? என்று கேட்டு, நடத்துநரை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடத்துநர் கொடுத்த புகாரின்பேரில், தாக்குதல் நடத்திய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.