இனி பணம் எடுக்க ATM போக வேணாம்; ரேஷன் கடை போதும் - அரசின் அசத்தல் திட்டம்
ரேஷன் கடைகளில் மைக்ரோ ஏடிஎம்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ரேஷன் கடை
ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு நியாய விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், பொங்கல் பண்டிகையின் போது கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் வேஷ்டி, சேலையும் வழங்கப்படுகிறது.
தற்போது ரேஷன் கடைகளிலேயே வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்ளும் வகையில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது. இது ஏடிஎம், வங்கிகளுக்கு செல்ல முடியாத மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
மைக்ரோ ஏடிஎம்
8 ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொன்டாலும், மின்னணு பாயின்ட்-ஆஃப்-சேல் இயந்திரங்களை, கோர் பேங்கிங் தளங்களுடன் இணைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இதை நடைமுறைப்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது.
ஏடிஎம்களை அமைக்க வாய்ப்புள்ள ரேஷன் கடைகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வுகள் முடியும்பட்சத்தில், விரைவில் ரேஷன் கடைகளில் ஏடிஎம்கள் தொடங்கப்படும். இந்த ஏடிஎம்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் கூடிய டிஜிட்டல் கருவிகளை கொண்டிருப்பதால், கோர் பேங்கிங் சேவைகளை வழங்கும் திறன் கொண்டது.
மூத்த குடிமக்கள்
மேலும் ஏடிஎம்கள் அமைந்துள்ள பகுதியில் வங்கியின் ஊழியர் ஒருவர் உதவியாளராக அமர்த்தப்பட்டிருப்பார். இந்த மைக்ரோ ஏடிஎம்கள் மூலம் ரூ.1000 முதல் ரூ.2000 வரை பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
ஓய்வூதியம் பெரும் மூத்தகுடிமக்கள் பலரும் இன்னும் நேரடியாக வங்கி அல்லது அஞ்சலகத்திற்கு சென்று நேரடியாக பணத்தை பெற்று வருகிறார்கள். இந்த திட்டம் இவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.