கோவிஷீல்ட்; அரிய பக்க விளைவுகள் ஏற்படும் - தயாரித்த நிறுவனமே விளக்கம்!
கொரோனா தடுப்பூசி ஓரிரு பக்க விளைவை ஏற்படுத்தும் என பிரிட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவிஷீல்டு
2019இல் பரவிய கொரோனா தொற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கி அனைத்து நாடுகளையும் உலுக்கி எடுத்தது. அதிலிருந்து மீளவே வருடங்கள் ஆனது.
அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வர கொரோனா தடுப்பூசி காரணமாக அமைந்தது. ஆனால் அதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவதாகவும், உயிரிழப்பு ஏற்படுவதாகவும் பரவலாக கூறப்பட்டது.
இந்நிலையில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் மோசமான பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி ஜேமி ஸ்காட் என்பவர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2021இல் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாகவும் இதனால் ரத்த உறைவு போன்ற பக்க விளைவுகளை எதிர்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
பக்க விளைவுகள்
தொடர்ந்து, அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில், "எங்கள் தடுப்பூசி, மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டிடிஎஸ் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு துல்லியமான காரணம் தெரியவில்லை.
அதேநேரம் இந்த டிடிஎஸ் பாதிப்பு தடுப்பூசியால் தான் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்று இல்லை. தடுப்பூசி இல்லாமல் கூட இந்த பாதிப்பு ஏற்படலாம். எனவே ஒவ்வொரு நபருக்கும் பாதிப்பு ஏற்படப் பல காரணங்கள் இருக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளது. தற்போது, அஸ்ட்ராஜெனெகா அளித்துள்ள இந்த விளக்கம் கவனம் பெற்றுள்ளது.
கொரோனா காலத்தில் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கி இருந்தது. இதனை தான் இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் என்ற பெயரில் உற்பத்தி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.