கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு 9 ஐரோப்பிய நாடுகள் அங்கீகாரம்!

India Vaccine Covid sheeld
By Thahir Jul 02, 2021 06:03 AM GMT
Report

கோவிஷீல்ட் தடுப்பூசியை 9 ஐரோப்பிய நாடுகள் ‘க்ரீன் பாஸ்போர்ட்’ திட்டத்தில் சேர்த்துள்ளன.

கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு 9 ஐரோப்பிய நாடுகள் அங்கீகாரம்! | Vaccine Covid19 Who

உலகம் முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி அனைத்து நாடுகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. படிப்பு மற்றும் வேலைக்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வோர் அந்தந்த நாடுகளின் தடுப்பூசி பட்டியலுக்கு ஏற்ப தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 உறுப்பு நாடுகளின் மக்களுக்காக ‘க்ரீன் பாஸ்போர்ட்’ திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தியுள்ளது. இதன்படி, ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகாரம் அளித்த 4 தடுப்பூசிகளைச் செலுத்திய மக்கள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தடையின்றி பயணிக்க முடியும். இல்லாவிட்டால் 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பின்புதான் அனுமதிக்கப்படுவார்கள்.

அதில் பைசர்/பயோஎன்டெக், மாடர்னா, வேக்ஸ்செவ்ரியா(அஸ்ட்ராஜென்கா), ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆகிய 4 தடுப்பூசிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. இதில் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இந்தியாவில் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தியிருந்தாலும் அந்த சான்றிதழை ஏற்கமுடியாது என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் வேக்ஸ்செவ்ரியா தடுப்பூசியைச் செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து இந்திய அரசு தரப்பில், “கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசி சான்றிதழ்களை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கும் வரை, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அளிக்கும் தடுப்பூசி சான்றிதழை இந்தியா ஏற்காமல் அவர்களை கட்டாயத் தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு தற்போது வரை 9 ஐரோப்பிய நாடுகள் அனுமதியளித்துள்ளன. இதன்படி, ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லோவேனியா, க்ரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, எஸ்டோனியா ஆகிய நாடுகள் கோவிஷீல்ட் தடுப்பூசியை அங்கீகரித்தன. ஆனால், 9 நாடுகளும் தங்களின் ஆட்சிக்கு உட்பட்டுத்தான் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளன ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.