இனி இந்தியாவிடம் அதற்காக கெஞ்ச மாட்டோம் - பாக்.கிரிக்கெட் வாரிய தலைவர் ஆவேசம்
இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடாது என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
IND vs PAK
ஐக்கிய அரபு அமீரகத்தில் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் டி20 வடிவில் நடத்தப்படவுள்ளது.
இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் செப்.14-ந் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இதற்கிடையில், அண்மையில் முடிவடைந்த லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்தது.
தொடர்ந்து ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் எக்காரணம் கொண்டும் இருதரப்பு தொடர்களில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடாது.
பாக். அதிரடி
பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடுவதற்கான அனுமதியும் கிடையாது. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கிரிக்கெட் வாரியங்கள் நடத்தும் தொடர்களில் பொதுவான இடங்களில் பாகிஸ்தான் உடன் விளையாட எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் வாரியத்தின் தலைவர் மோசின் நக்வி அளித்த பேட்டி ஒன்றில், “இரு நாடுகளுக்கிடையே எப்போது பேச்சு வார்த்தை நடக்கிறதோ, அப்போதெல்லாம் நாங்கள் இந்தியாவுக்கு சமமாக இருப்போம் என்பதில் மிகத்தெளிவாக உள்ளோம்.
இனி பேச்சுவார்த்தைகளுக்காக கெஞ்ச மாட்டோம். அந்த காலம் எல்லாம் முடிந்துவிட்டது. இனி என்ன நடந்தாலும் சமத்துவத்தின் அடிப்படையிலேயே நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.