சசி தரூரை தொடர்ந்து அசோக் கெலாட் - காங்கிரஸ் தலைவர்?
தொண்டர்கள் விரும்பினால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட தயார் என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல்
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24 முதல் 30-ம் தேதி வரை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில், கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டுமென தமிழக பல்வேறு மாநில காங்கிரஸ் தலைமை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
சசி தரூர்
அதனைத் தொடர்ந்து, ஜி23 என்று அழைக்கப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சசி தரூர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அசோக் கெலாட் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”காங்கிரஸ் கட்சியும், கட்சி மேலிடமும் எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளது. நான் 40 முதல் 50 ஆண்டுகளாக பதவியில் உள்ளேன். என்னை பொறுத்தவரை எனக்கு பதவி முக்கியமல்ல.
அசோக் கெலாட்
எனக்கு கொடுக்கப்படும் பொறுப்புகளை நான் செய்து முடிப்பேன். காங்கிரஸ் கட்சியின் ஆண், பெண் தொண்டர்கள் என் மீது அளவற்ற அன்பையும், நம்பிக்கையையும் கொண்டுள்ளனர். ஆகையால், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தொண்டர்கள் கேட்டுக்கொண்டால் நான் அதை நிராகரிக்க முடியாது.
கட்சி தொண்டர்கள் விரும்பினால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய தயார். எனது நண்பர்களுடன் இது குறித்து பேசவேண்டும். எனக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சராக எனது பொறுப்பை செய்து வருகிறேன். தொடர்ந்து செய்வேன். பதவி எனக்கு முக்கியமல்ல. முடிவெடுப்பது என்கையில் இருந்தால் நான் எந்த பதவியையும் ஏற்க விரும்பவில்லை. நான் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரையில் சேர விரும்புகிறேன்.
நாட்டு நிலைமையை பார்த்தால் அரசியலமைப்பு அழிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. பாஜக நாட்டை அழிக்கிறது” என்றார்.