அரும்பாக்கம் வங்கி கொள்ளை - துப்பு கொடுத்தால் ரூ.1லட்சம் பரிசு!
அரும்பாக்கம் கொள்ளை வழக்கு தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் பொதுமக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகை கொள்ளை
அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் ஃபெட் நகைக்கடன் நிறுவனத்தின் கிளையில், இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர், காவலாளி மற்றும் ஊழியர்களை கட்டிப்போட்டு 20 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று அரும்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கூடுதல் ஆணையர் அன்பு மற்றும் துணை ஆணையர் விஜயகுமார் நேரில் ஆய்வு நடத்தினர்.
சைலேந்திர பாபு அறிவிப்பு
முதற்கட்ட விசாரணையில் வங்கியில் வேலை பார்த்த நபர்களே கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.இதில், கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது, நிறுவனத்தின் ஊழியர் முருகன் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், அரும்பாக்கம் கொள்ளை குறித்து துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
1 லட்சம் பரிசு
முன்னதாக, காவலர்களுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது பொதுமக்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தகவல் அளிக்கும் பொதுமக்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.