வலை வீசும் போலீஸ்..நீதிமன்றம் உத்தரவிட்ட பிடிவாரண்ட்..!! சிக்கலில் பவர் ஸ்டார்..!!
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ராமநாதபுரம் நடுவர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவர் ஸ்டார்
தமிழ் சினிமாவில் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் சீனிவாசன். லத்திகா படம் மூலம் நாயகனான இவர், பிறகு சந்தானத்துடன் நடித்த "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தின் மூலம் நல்ல பிரபலம் பெற்றார்.
அந்த படம் கொடுத்த அறிமுகத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து இவர், டாக்டர் பட்டம் பெற்று பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் இவர், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார்.
வழக்கு என்ன..?
தற்போது மீண்டும் படஙக்ளில் நடித்து வரும் சீனிவாசன் மீது மீண்டும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் உப்பளம் மற்றும் விரால் பண்ணை நடத்தி வருபவர் முனியசாமி. தொழிலை விரிவுப்படுத்தும் நோக்கத்தில் கடன் வாங்க முடிவு செய்த அவர் சீனிவாசனிடம் இது குறித்து பேச, அவர் 15 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாகவும் ஆனால் அதற்கு முன்பணம் மற்றும் ஆவண செலவுக்காக 14 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறியிருக்கின்றார்.
பவர் ஸ்டாரிடம் கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரூ.14 லட்சத்தை முனியசாமி வழங்கிய நிலையில், பவர் ஸ்டார் சீனிவாசன் அவருக்கு கடன் பெற்று கொடுக்கவில்லை. பிறகு கேள்வி கேட்டவுடன் சீனிவாசன் செக் வழங்க அது பணம் இன்றி செக் திரும்பி உள்ளது. இதையடுத்து முனியசாமி சார்பில் ராமநாதபுரம் நடுவர் நீதிமன்றத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும் படி நீதிமன்றம் பலமுறை சீனிவாசனுக்கு உத்தரவிட்ட நிலையிலும், அவர் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்துள்ளார். இதனை தொடர்ந்து தான் தற்போது ராமநாதபுரம் நீதிமன்றம் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த பிடிவாரண்ட் சீனிவாசன் வசித்து வரும் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பிடிவாரண்ட்டில் வரும் ஜனவரி 2-ஆம் தேதிக்குள் சீனிவாசனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.