ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள் - மாயாவதி ஆவேசம்
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி
ஆம்ஸ்ட்ராங்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் (05.07.2024) இரவு சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் வெளியே பேசிக்கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக தற்போது வரை 11 பேரை காவல் துறை கைது செய்துள்ளது. அவரது உடல் அஞ்சலிக்காக தனியார் பள்ளி ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவருமான மாயாவதி தனி விமானத்தில் சென்னை வந்தார்.
மாயாவதி
பெரம்பூரில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாயாவதி ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு ஆறுதல் கூறினார். இதனையடுத்து பேசிய மாயாவதி, "புத்தர் காட்டிய மனிதாபிமானப் பாதையில் பயணித்தவர் ஆம்ஸ்ட்ராங். தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியைப் பலப்படுத்த சிறப்பாகப் பணியாற்றியவர் ஆம்ஸ்ட்ராங். இலவசமாக பல ஏழைகளுக்காக வழக்கை வாதாடியுள்ளார்.
அவர் வீட்டின் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.
இது தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை காட்டுகிறது. உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. கட்சியினர் சட்டம் ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி உறுதுணையாக இருக்கும்." என பேசினார்.