களைகட்டும் விஜய்யின் தவெக மாநாடு - செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?
விஜய்யின் தவெக மாநாட்டில் என்னென்னெ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.
விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்த விஜய், உறுப்பினர் சேர்க்கை, பொறுப்பாளர் நியமனம், கட்சி கொடி அறிவிப்பு என கட்சி பணிகளில் தீவிரம் காட்டினார்.
தவெக மாநாடு
இந்நிலையில் தனது முதல் அரசியல் மாநாட்டை நாளை(27.10.2024) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டியில் நடத்தி தனது கட்சி கொள்கைகளை அறிவிக்க உள்ளார்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் மொத்தம் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான பணிகளை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னின்று கவனித்து வருகிறார்.
மாநாட்டு முகப்பு
அம்பேத்கர், விஜய், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், பெரியார் ஆகியோரின் கட் அவுட்கள் மாநாடு மேடையின் முகப்பிலும், ஜார்ஜ் கோட்டை செட்டில் அமைந்த நுழைவு வாயிலிலும் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருக்கிறது.
மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்களும், வலது புறத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கட்-அவுட்களும் வைக்கப்பட்டுள்ளன.
கார் பார்க்கிங்
லட்சக்கணக்கானோர் மாநாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வாகனத்தில் வருபவர்களுக்கு பார்க்கிங் செய்ய 75 ஏக்கர் அளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க தனித்தனி பார்டிஷியன்களாக பிரிக்கப்பட்டு 48 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் அமர தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பாதுகாப்பிற்காக 700 கண்காணிப்பு கேமராக்கள், வெகுதொலைவில் இருந்து மாநாட்டை பார்க்கும் வகையில் பெரிய டிஜிட்டல் திரைகள், 100க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 300க்கும் மேற்பாட்ட நடமாடும் கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டுத் திடலை ஒட்டி உள்ள சாலைகளில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மாநாட்டு அரங்குகளில் மட்டும் சுமார் 20,000 மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து மாற்றம்
தேசிய நெடுஞ்சாலை அருகே மாநாடு நடக்க உள்ள நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து திருச்சி நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் பேருந்துகள் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருப்பி விடப்படுகின்றன. கனரக வாகனங்கள் திண்டிவனத்தில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கார்களை பொறுத்த அளவில், திண்டிவனத்தில் இருந்து மயிலம், பெரும்பாக்கம் வழியாக விழுப்புரம் செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டிருக்கின்றன. திருச்சியில் இருந்து சென்னை வரும் பேருந்து, கார்கள் செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னை வரும் வகையிலும், கனரக வாகனங்கள் வில்லியனூர், திண்டிவனம் வழியாக சென்னை வரும் வகையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு
6,000 காவல்துறையினர் மாநாட்டிற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், துபாயை தலைமையிடமாக கொண்ட ஜென்டர் செக்யூரிட்டீஸ் நிறுவனம் சார்பில் தவெக மாநாட்டிற்கு பவுன்சர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனா்.
கடும் வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் குளுக்கோஸ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மாநாட்டுக்கு வருபவர்கள் தொப்பி அணிந்து வரவும், குடை எடுத்து வரவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.மேலும், மாநாட்டுக்கு வருபவர்களுக்கு சிற்றுண்டி, தண்ணீர் பாட்டில்கள் தரப்படவிருக்கின்றன.
ஒரே இடத்தில் லட்சக்கணக்கானோர் கூட உள்ளதால் தகவல் தொடர்பு எளிதாக இருக்க பிரத்யேகமாக ஒரு மொபைல் டவர் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலின் பின் வரிசையாக கேரவன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பிரபலங்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெக்கானிக் குழு
மாநாட்டிற்கு வருபவர்கள் மது அருந்தி விட்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, மாநாட்டினுள் நுழையும் இடத்தில் மது அருந்தியிருப்பதை செக் செய்வதற்கு கருவிகளுடன் பக்காவான செக்கிங் ஏற்பாடுகள் இருக்கின்றன.
மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனம் திடீரென பழுதாகிவிட்டாலோ, அல்லது பஞ்சர் ஆகிவிட்டாலோ அதை இலவசமாக உடனடியாக சரிசெய்துகொடுக்க மெக்கானிக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், வாகனம் சகதிகளில் சிக்கிக்கொண்டால் அதை மீட்கவும் டிராக்டர் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
விஜய் பேசும் நேரம்
600 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள ரேம்பில் நடந்து சென்றவாறு மாநாட்டுத்திடலில் கூடியிருக்கும் தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
மாநாட்டு திடலில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் 20 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட தவெக கொடியை நாளை விஜய் பறக்க விடஉள்ளார். கயிறு வைத்து இழுத்தும், ரிமோட் மூலமாகவும் இந்த கம்பத்தில் கொடியை ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
4 மணிக்கு தொடங்கும் மாநாட்டில் 6 மணிக்கு விஜய் தனது உரையை தொடங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய மாநாட்டில் விஜய் என்ன பேச உள்ளார் என அவரது அவரது ரசிகர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி மொத்த தமிழ்நாடும் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளது.