ஆம்ஸ்ட்ராங் கொலை; இவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை - திருமாவளவன் பரபரப்பு பேட்டி
ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சென்றுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் வெளியே பேசிக்கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷ் என்பவரின் தம்பி பாலு உள்ளிட்ட 8 பேர் நேற்று நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்தார்கள். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
தொல்.திருமாவளவன்
இந்நிலையில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். இதில் அவர் பேசியதாவது, ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. தமிழக அரசு அதற்கான அனுமதியை வழங்கி உள்ளது. மேலும் அவருடைய சொந்த இடத்தில் உள்ள கட்சி அலுவலகத்தின் வளாகத்தில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு பகுஜன் சமாஜ் கோரிக்கை வைத்துள்ளது. விடுதலை சிறுத்தை கட்சியும் இந்த கோரிக்கையை வலியுறுத்துகிறது. தமிழக அரசு இதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.
இந்த கொலை வழக்கில் தற்போது சரண் அடைந்தவர்கள், உண்மையான குற்றவாளிகள் இல்லை. சரண் அடைந்தவர்களை கைது செய்துவிட்டோம் என்ற வகையிலே காவல்துறை புலன் விசாரணையை நிறுத்திக் கொள்ளக்கூடாது. கொலையை தூண்டியவர்களையும் கைது செய்ய வேண்டும் என பேசியுள்ளார்.