8 பச்சிளம் குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொன்ற நர்ஸ் - காரணம் என்ன?
பிறந்து சில நாட்களே ஆன 8 குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி செவிலியர் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
குழந்தைகள் இறப்பு
அர்ஜெண்டினா நாட்டின் கோர்டோபா நகரில் 'நியோநாட்டல் மெட்டேர்னிட்டி' என்ற பெயரில் மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன.
இந்நிலையில், இந்த மருத்துவமனையில் 2 குழந்தைகள் பிறந்த அடுத்த நாளே மர்மமான முறையில் இறந்துள்ளன. ஒவ்வொரு மாதமும் இரண்டு குழந்தைகள் வீதம் இதுபோல் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.
சிசிடிவி காட்சிகள்
இதனால் அதிருப்தியடைந்த மருத்துவமனை நிர்வாகம் கடந்த மே மாதம் மகப்பேறு வார்டில் பணிபுரியும் 10 செவிலியர்களை 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்தது. அதன் பிறகு, அந்த செவிலியர்கள் வேலைக்கு வரத் தொடங்கினர்.
அதுவரை மருத்துவமனையில் எந்த குழந்தையும் இறந்து போகவில்லை. ஆனால் அந்த செவிலியர்கள் வேலைக்கு வந்த மூன்றாவது நாளே மற்றொரு குழந்தை இறந்து போனது. அதனையடுத்து, குழந்தைகள் வைக்கப்பட்டிருக்கும் வார்டில் மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவி கேமராக்களை மறைவான இடங்களில் பொருத்தியது.
சைக்கோ நர்ஸ்
அதில் புதிதாக செவிலியர் வேலைக்கு சேர்ந்த பிரெண்டா அக்யூரோ (27) என்பவர் நள்ளிரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அந்த வார்டுக்குள் நுழைந்து ஒரு குழந்தைக்கு ஏதோ ஊசி செலுத்துவதையும், அதன் பின்னர் அந்தக் குழந்தை துடிதுடித்து இறந்து போவதையும் அவர்கள் கண்டனர்.
பின்னர் இதுகுறித்து போலீஸாருக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தது. இதன்பேரில், பிரெண்டா அக்யூரோவை கைது செய்து நடத்திய விசாரணையில், கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரையில் 8 பச்சிளம் குழந்தைகளை இதுபோல் விஷ ஊசி செலுத்திக் கொன்றதை பிரெண்டா ஒப்புக்கொண்டார்.
சிறு வயதில் மனதளவில் பெரிதாக பாதிக்கப்பட்டதால் பிரெண்டா சைக்கோவாக மாறியிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.