சென்னையில் வாழும் மன்னர் வம்சம்.. முக்கிய பகுதியில் பெரிய அரண்மனை - எங்கு தெரியுமா?
தற்போதும் சென்னையில் வாழும் மன்னர் வம்சாவழி பற்றி இந்த பதிவில் காணலாம்.
மன்னர் வம்சம்..
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில், சென்ட்ரல் ரயில் நிலையம், நேப்பியர் பாலம், வள்ளுவர் கோட்டம், எல்ஐசி, மெரினா கடற்கரை என்று பல்வேறு அடையாளங்கள் இருக்கின்றன. முதன்மையான காரணம் ஆங்கிலேயர்கள் காலத்தில் சென்னை, தலைமை இடமாக கொண்டு இயக்கப்பட்டதுதான்.
அதாவது ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டது. சென்னை, மெட்ராஸ் என அழைக்கப்பட்டது. இதனிடையே இப்பகுதியில் இருந்த மன்னர்கள் மற்றும் அவர்கள் அரண்மனைகள் இப்போது கூட சென்னையில் உள்ளது.
அதாவது சென்னையின் முக்கிய பகுதியாக இருக்கும் ராயப்பேட்டையில் 14 ஏக்கரில் ஒரு பெரிய அரண்மனை இருக்கிறது. இங்கு தற்போதும் மன்னர் குடும்பத்தினரின் வம்சாவழியினர் வாழ்ந்து வருகின்றனர்.
அரண்மனை
ஆற்காடு நவாப் ஆட்சி செய்த பகுதியில் சென்னையின் சில பாகங்களும் அடங்கும். சென்னை கடற்கரை அருகில் அமைந்துள்ள சேப்பாக்கத்தில் தான் ஆற்காடு நவாப்பின் அரண்மனை அமைக்கப்பட்டது. 1768 ஆம் ஆண்டு முதல் 1855 ஆம் ஆண்டு வரை ஆற்காடு நவாப் அங்கு தான் வாழ்ந்து வந்தனர்.
1855 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களில் வாரிசு இழப்புக் கொள்கையின்படி, ஆற்காடு நவாப்பின் ஆட்சியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். அதன் பிறகு, திருவல்லிக்கேணி பிரதான சாலையில் ஷாதி மஹால் என்ற சிறிய இடத்தில் ஆற்காடு நவாப்பின் குடும்பம் வாழ்ந்துவந்தனர்.
ஆங்கிலேயர்களுடனான நல்ல உடன்படுக்கையில் இருந்த ஆற்காடு நவாப்பிற்கு அந்த சிறிய இடம் சரியானது இல்லை என்று கருதிய ஆங்கிலேயர்கள் ராயப்பேட்டையில் இருக்கும் அமீர் மஹால் என்ற பெரிய அரண்மனையை அளித்தனர்.
எங்கு தெரியுமா?
1798 ஆம் ஆண்டு இந்தோ சர்செனிக் முறையில் கட்டப்பட்ட அமீர் மஹாலை ஆங்கிலேயர்கள் அரசு அலுவலகமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், 1876 ஆம் ஆண்டு இந்த மஹாலை நவாப் குடும்பம் வசிப்பதற்கான இடமாக மாற்றினர்.
அங்கு குடியேறிய ஆற்காடு நவாப் குடும்பம் தற்போது வரை அங்கு தான் வசித்து வருகின்றனர். முகமது அப்துல் அலி நவாப் தற்போதைய ஆற்காடு நவாப்பின் மன்னராக உள்ளார். இவர் அவரின் குடும்பத்துடன் அமீர் மஹால் அரண்மனையில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னதாக அவர்கள் வாழ்ந்த சேப்பாக்கம் அரண்மனை அரசு உடமையாக்கப்பட்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு பின்பு அரசிடம் வந்துள்ளது. தற்போது தமிழ்நாடு அரசின் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.