இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பிரபல இஸ்ரேலிய நடிகை அதிரடி கைது - என்ன காரணம்?
பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் வகையில் ஆதரவு தெரிவித்ததாக மைசா அப்தெல் ஹாடி என்ற அரபு-இஸ்ரேலிய நடிகை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலை நடத்தினர் . இதில் பல இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். தற்போது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது.
இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். பல்வேறு நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோளையும் மதிக்காமல் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது உலகையே உலுக்கியது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேல்-ஹாமாஸ் போர் உச்சமடைந்துள்ளது. இதில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 6000த்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை கைது
மேலும், இத்தனை உயிர்களை பலிகொண்ட போரானது இன்னும் முடிவடையாமல் 3வது வாரமாக தொடர்கிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் வகையில் ஹமாஸ் குழுவினரின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்ததாக மைசா அப்தெல் ஹாடி என்ற அரபு-இஸ்ரேலிய நடிகை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் "1989 வரை ஜெர்மனியைப் பிரித்த பெர்லின் சுவரின் வீழ்ச்சியைக் குறிப்பிடும் வகையில் "பெர்லின் பாணியில் செல்வோம் (Let's go Berlin-style)" என காசா பகுதிக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள வேலியை புல்டோசர் உடைக்கும் படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஹமாஸால் பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்ட 85 வயதான பெண் யாஃபா அதாரின் படங்களையும் சிரிக்கும் எமோஜிகளுடன் நடிகை மைசா அப்தெல் ஹாடி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையில் பாராட்டி, வெறுப்பு பேச்சுகளைப் பேசியதிற்காக நடிகை மைசா அப்தெல் ஹாடி கைது செய்யப்பட்டுள்ளார்.